ஊழல் கண்காணிப்பு தலைமை ஆணையர் தாமஸை நீக்குகிறது மத்திய அரசு!

posted in: அரசியல் | 0

டெல்லி: மத்திய ஊழல் கண்காணிப்பு (CVC) தலைமை ஆணையர் பி.ஜே. தாமஸை அந்தப் பதவியிலிருந்து நீக்குகிறது மத்திய அரசு. 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் அடுத்த அதிரடித் திருப்பமாக இது பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் தொலைத் தொடர்புத் துறையின் செயலராக இருந்தவர் பி ஜே தாமஸ்.

அப்போதுதான் ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் அரங்கேறியுள்ளன. பின்னர் இவரை தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமித்தது மத்திய அரசு.

கேரளாவைச் சேர்ந்த பி ஜே தாமஸ் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் அவரை நாட்டின் மிக முக்கியமான பொறுப்பில் மத்திய அரசு நியமித்ததைக் கடுமையாகக் கண்டித்தது உச்சநீதி மன்றம்.

பாமாயில் ஏற்றுமதியில் நடந்த முறைகேட்டில் தாமஸ் மீது குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தின் பார்வையில் குற்றவாளியான ஒருவரை எப்படி தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்க முடியும் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இவரது பதவி ஏற்பு நிகழ்ச்சியையே புறக்கணித்தன எதிர்க்கட்சிகள்.

ஆனால் இவை அனைத்தையும் புறம் தள்ளிவிட்டு, அவரை இந்த பெரிய பதவியில் அமர்த்தியது மத்திய அரசு.

இப்போது 2 ஜி முறைகேடுகள், அதில் இழக்கப்பட்டுள்ள ரூ 1.76 லட்சம் கோடி பணம் போன்றவை நாட்டையே உலுக்கிக் கொண்டுள்ளன. இதில் தொலைத் தொடர்புத் துறைக்கு அமைச்சராக இருந்த ஆ ராசா பதவி விலகினார். அவருக்கு அடுத்து அந்தத் துறையின் முன்னாள் செயலரான பிஜே தாமஸையும் பதவி விலகச் சொல்லியிருக்கிறது மத்திய அரசு.

இது தொடர்பாக நேற்று மாலை அவர் மத்திய உள்துறை அமைச்சர் ப சிதம்பரத்தை டெல்லியில் சந்தித்துப் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *