பெட்ரோலிய – எரிவாயு துறை படிப்புகளும், வாய்ப்புகளும்

posted in: கல்வி | 0

இன்று சுற்றுப்புற சூழலின் முக்கியத்துவம் கருதி, எரிபொருள் தேவைக்கு அணுசக்தி மற்றும் சோலார் சக்தி போன்றவற்றின் பயன்பாடுகள் துவங்கியுள்ளன.

அவற்றைப் பற்றிய விரிவான ஆய்வுகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில், அத்தகைய ஆற்றல்களின் பயன்பாடுகள் இன்னும் முழுமையாக பெறாததால், பெட்ரோலிய துறையே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இன்னும் 25௦-30 ஆண்டுகளுக்கு அத்துறையின் முக்கியத்துவம் நீடிப்பதோடு, அதில் வேலை வாய்ப்புகளும் நல்ல சம்பளத்தில் அதிகமாக இருக்கும் என்பது நிபுணர்களின் கருத்து.

இத்துறையில் பணிக்கு சேரும் ஒருவர், ஐ.டி., பி.பி.ஓ. துறை பணியாளர்களைப் போல், அவ்வப்போது இடம் மாறாமல், ஒரே இடத்தில் நீண்டகாலம், ஏன், ஓய்வுபெறும் வரை ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் சூழலும் இத்துறையில் ஏற்படுகிறது.

எண்ணெய் – எரிவாயு பொறியியல் படிப்புகள்:
பொதுவாக பெட்ரோலிய பொறியியல் படிப்பு என்பது, பலவிதமான பொறியியல் படிப்புகளின் கூட்டு கலவையே ஆகும். ஒரு முழுஅளவிலான பெட்ரோலிய பொறியாளர் கெமிக்கல், எலக்ட்ரிகல், சிவில், இன்ஸ்ட்ரூமென்டேஷன் மற்றும் கண்ட்ரோல் இன்ஜினீயராகவும் இருப்பார். மேலும் அவருக்கு ஜியாலஜி, ஜியோபிசிக்ஸ் போன்றவையும் தெரிந்திருக்கும். ஏனெனில் இந்த அனைத்து துறைகளுமே, பெட்ரோலிய பொறியியல் செயல்பாட்டில் முக்கியமானவை.

இத்துறை சார்ந்த எம்.பி.ஏ. படிப்பில், மாணவர்கள் படிப்பின்போதான பயிற்சி முடித்து திரும்பியதும், அவர்கள் ஆய்வுக்கட்டுரை சம்பந்தமான பணிகளில் ஈடுபடுகிறார்கள். மேலும் திட்ட வடிவமைப்பு, பகுப்பாய்வு, தரவு சேகரிப்பு போன்ற பல பணிகளில் தங்கள் படிப்பு காலத்தில் ஈடுபடும் வகையில் மிக நுட்பமாகவும், திறமையாகவும் இத்துறை சார்ந்த எம்.பி.ஏ. வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோலிய பொறியாளர்களின் பணி:
பெட்ரோகெமிக்கல் பொறியியலில் 3 முக்கிய பகுதிகள் உள்ளன. அவற்றில் மாணவர்கள் தாங்கள் விரும்பும் பகுதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

1. அப்ஸ்ட்ரீம்:
இந்த பிரிவானது ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு பிரிவாகும். இதில் நிலத்தடி மற்றும் நீரடி எண்ணெய் கண்டுபிடிப்பு, அவற்றை எடுத்தல், புதியவகை எரிவாயு, எண்ணெய் ஆற்றல்களை கண்டுபிடித்தல் போன்றவை அடங்கும்.

2. மிட்ஸ்ட்ரீம்:
இந்த பிரிவில் எண்ணெய், எரிவாயு ஆற்றல்களின் சேகரிப்பு, சந்தைப்படுத்தல் மற்றும் போக்குவரத்து போன்றவை அடங்கும்.

3. டவுன்ஸ்ட்ரீம்:
இப்பிரிவில் பக்குவப்படுத்தப்படாத எண்ணையை சுத்திகரித்தல், அதிலிருந்து உருவாகும் தயாரிப்புகளை விற்பனை செய்தல், இயற்கை எரிவாயுவை பகிர்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்றவை அடங்கும்.

படிக்கவேண்டியது:
பி.டெக்./எம்.டெக். முடித்தவர்கள் பெட்ரோலிய நிறுவனங்களின் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு பணிகளில் ஈடுபடுகையில், மேலாண்மை படித்தவர்களோ, சந்தைப்படுத்தல், நிதி, மனிதவள செயல்பாடுகள் போன்ற பணிகளில் ஈடுபடுகிறார்கள். அந்த மேலாண்மை பணிகளுக்குத்தான் எம்.பி.ஏ. பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

பெட்ரோலிய துறை என்பது ஒரு தொழில்நுட்ப ஆதிக்கம் கொண்ட துறையாக இருப்பதால், பொதுவாக பி.டெக்./எம்.டெக். முடித்தவர்களே எளிதில் நுழையும் வாய்ப்பு இருந்தது. அதேசமயம் பி.டி.பி.யு/யு.பி.இ.எஸ்/ஆர்.ஜி.ஐ.பி.டி. போன்று பெட்ரோலிய படிப்புகளுக்காகவே பிரத்யேகமாக இருக்கும் கல்வி நிறுவனங்களில், எண்ணெய் – எரிவாயு துறையில் பி.பி.ஏ. அல்லது எம்.பி.ஏ. படித்தவர்கள் இந்த துறைகளில் நல்ல வாய்ப்புகளை பெறலாம்.

மேலும் இந்த துறையில் எம்.பி.ஏ. படிப்பவர்கள், பொதுவாக இளநிலையில் பி.இ/பி.டெக். படித்தவர்களாக இருப்பார்கள். ஏனெனில் இதுபோன்ற உயர்தர தொழில்நுட்ப ஆதிக்கம் செலுத்தும் துறையில், இளநிலை பொறியியல் படிப்புகள் ஒருவருக்கு பேருதவி புரியும்.

வாய்ப்புகள்:
இந்த எண்ணெய் – எரிவாயு பொறியியல் மற்றும் நிர்வாக படிப்புகளை படிக்கும் மாணவர்கள் அத்துறையில் மட்டுமே வேலைவாய்ப்பை பெறுவதில்லை. எண்ணெய் – எரிவாயு துறையில் திட்டங்கள் வைத்துள்ள விப்ரோ – டி.சி.எஸ். போன்ற ஐ.டி. நிறுவனங்களும் தங்களின் அத்துறை சார்ந்த திட்டங்களுக்கு, அத்துறை மாணவர்களை பணியமர்த்துகின்றன. அதேசமயம் அந்த மாணவர்களுக்கு ஐ.டி. சம்பந்தமான அறிவும் இருந்தால் கூடுதல் லாபம்.

சம்பளம்:
சராசரி சம்பளம் 4.5 லட்சத்தில் தொடங்கி, எம்.பி.ஏ. முடித்தவர்களுக்கு 10 லட்சம் வரை கிடைக்கிறது . 6வது சம்பள கமிஷன் மூலம் இத்துறையில் சம்பளம் மேலும் உயர்ந்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு:
இந்தியாவில் படித்த பெட்ரோலிய பொறியாளர்களில் 30% வெளிநாட்டில் பணிபுரிகிறார்கள். மேலும் பிரிட்டீஷ் கேஸ் மற்றும் ஸ்லம்பர்கர் போன்ற சர்வதேச பெருநிறுவனங்களின் மீது பலரின் கவனம் இருக்கிறது.

பணித்தன்மை:
இந்த துறையில் சம்பளம் மிக அதிகமாக இருந்தாலும், வேலைத்தன்மையும் கடினம்தான். எனவே இத்துறை சார்ந்த கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் கிராமப்பகுதி உள்ளிட்ட பல இடங்களில் பயிற்சிக்கு அனுப்பப்படுகிறார்கள். இத்துறையில் கடினமான உடல் உழைப்பு தேவைப்படுவதால், சிறப்பு பயிற்சி தேவைப்படுகிறது. மும்பை, வடகிழக்கிலுள்ள மலைப்பாங்கான பகுதிகள், பாலைவனம் போன்ற பல்வேறான பகுதிகளில் நீங்கள் பணி சூழல்களை எதிர்கொள்ளலாம்.

பெட்ரோலியம் – எரிவாயு சம்பந்தமான படிப்புகளுக்கு பெயர்பெற்ற சில கல்வி நிறுவனங்களை பற்றிய விவரங்களை இங்கே குறிப்பிட்டுள்ளோம். இதன்மூலம் தெளிவான விவரங்களை பெற்று மாணவர்கள் பயன்பெறலாம்.

ஸ்கூல் ஆப் பெட்ரோலியம் மேனேஜ்மென்ட் – காந்திநகர், குஜராத் – http://spm.pdpu.ac.in

ஸ்கூல் ஆப் பெட்ரோலியம் டெக்னாலஜி – காந்திநகர், குஜராத் – http://spt.pdpu.ac.in

UPES – டெஹ்ராடூன், உத்தரகாண்ட் – www.upes.ac.in
RGIPT – ரேபரேலி, உத்திரபிரதேசம் – www.rgipt.in
ISM தன்பாத் – தன்பாத், ஜார்கண்ட் – www.ismdhanbad.ac.in
திப்ருகர் பல்கலைக்கழகம் – திப்ருகர், அஸ்ஸாம் – www.dibru.ac.in
ஐ.ஐ.டி சென்னை – சென்னை – www.iitm.ac.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *