லஷ்கர் ஆண்டு ராணுவ பட்ஜெட் ரூ.23 கோடி : தொடர்கிறது விக்கிலீக்ஸ் தகவல்

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் ஆண்டு ராணுவ பட்ஜெட் மட்டும் 23 கோடி ரூபாய்; அதற்காக ஜமாத் உத் தவா (ஜே.யு.டி.,) அமைப்பின் பல்வேறு அறக்கட்டளைகள் மூலம் லஷ்கர் நிதி திரட்டியது;

பாகிஸ்தானின் கோரிக்கையால், ஜே.யு.டி., மீது தடை விதிக்க ஐ.நா., முயன்ற போது அதை சீனா தடுத்தது என பல்வேறு ரகசிய தகவல்கள், “விக்கிலீக்ஸ்’ வெளியிட்ட ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளன.

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத இயக்கமான லஷ்கர் -இ- தொய்பாவும், அதன் தலைவர் ஹபீத் சயீத்தும் மும்பைத் தாக்குதல் வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். லஷ்கர் -இ- தொய்பா பற்றிய பல்வேறு முக்கியமான தகவல்கள், “விக்கிலீக்ஸ்’ சமீபத்தில் வெளியிட்டுள்ள ரகசிய ஆவணங்கள் மூலம் வெளிவந்துள்ளன.

இது பற்றி ரகசிய ஆவணங்கள் கூறுவதாவது: கடந்த 1986ல் பாகிஸ்தானில் மர்க்கஸ் உத் தவாவால் இர்ஷாத் (எம்.டி.ஐ.,) என்ற அமைப்பு நிறுவப்பட்டது. ஜமாத் உத் தவாவின் (ஜே.யு.டி.,) வக்கீல்கள், ஐ.நா., பாதுகாப்புச் சபைக்கு அனுப்பியுள்ள மனுவின் படி, எம்.டி.ஐ.,யில் இருந்து தான் லஷ்கர் அமைப்பும், ஜே.யு.டி.,யும் கிளைத்தன.

இவை இரண்டுக்கும் ஹபீத் சயீத் தலைவராகவும், ஜாகிர் உர் ரஹ்மான் லக்வி, லஷ்கரின் படைத் தளபதியாகவும் செயல்பட்டுள்ளனர். லஷ்கரின் ஆண்டு ராணுவ பட்ஜெட் மட்டும் 23 கோடி ரூபாய். இந்த பட்ஜெட்டில் தான் லக்வி, லஷ்கர் அமைப்புக்கு பல்வேறு ஆயுதங்களை வாங்கிக் குவித்தார்.

கடந்த 2002ல், பாகிஸ்தானில் லஷ்கர் பயங்கரவாத அமைப்பு என்று அறிவிக்கப்பட்ட பின், எம்.டி.ஐ., தனக்கும், லஷ்கருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று அறிவித்தது. அதன் பின், எம்.டி.ஐ., ஜே.யு.டி., என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஜே.யு.டி., தொடர்ந்து இயங்குவதற்காக, லஷ்கர் தனது சொத்துக்களையும், ஆட்களையும் ஜே.யு.டி.,க்கு கொடுத்து உதவியது. கைமாறாக, ஜே.யு.டி.,யின், “இதாரா கித்மட் இ கல்க், பாஸ்பான் இ அஹ்லே ஹதீத், பாஸ்பான் இ காஷ்மீர், அல் மன்சூரியன் மற்றும் அல் நசர்யீன்’ போன்ற பல்வேறு அறக்கட்டளைகள் மூலம் லஷ்கர் நிதி திரட்டிக் கொண்டது.

இந்த அறக்கட்டளைகள், கல்வி, மதம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்காக நிதி திரட்டின. தனிநபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மதரசாக்கள் மற்றும் தெற்காசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தொழிலதிபர்கள் ஆகியோர் இவற்றுக்கு நிதியுதவி செய்தனர். அவற்றில் ஒரு பங்கு லஷ்கருக்கும் சென்றது. மும்பைத் தாக்குதலுக்குப் பின் ஜே.யு.டி.,க்கு நிதியுதவி செய்தவர்கள் சிலர், தங்களது உதவி பயங்கரவாதத்திற்குப் பயன்படுத்தப்படுவதை உணர்ந்து நிறுத்திக் கொண்டனர்.

நிதி திரட்டுவதற்காக லஷ்கரின் முக்கியமான நன்கொடையாளரான மக்கி, 2002ல் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டார். ஜே.யு.டி.,யின் பெயரில் வசூலிக்கப்பட்ட நன்கொடைகள் மூலம், தெற்காசியாவில் நடந்த மும்பைத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களை லஷ்கர் திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளது. மும்பைத் தாக்குதலுக்குப் பின் 2009 ஜனவரி முதல், ஜே.யு.டி., “தாரிக் இ ஹர்மத் இ ரசூல்’ என்ற பெயரிலும் செயல்பட ஆரம்பித்தது.

ஜே.யு.டி., மற்றும் லஷ்கர் இடையேயான தொடர்பு, அமெரிக்காவை கவலை கொள்ளச் செய்தது. அதனால், ஐ.நா., பாதுகாப்புச் சபையில், அல்- குவைதா, தலிபான் மீதான தடைகளை விதிக்கும் கமிட்டியிடம், தடை பட்டியலில் ஜே.யு.டி.,யையும் சேர்க்க ஆலோசனை கூறியது. ஆனால், பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினரான சீனா, பாகிஸ்தானின் கோரிக்கையின் பேரில், அந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தியது. இவ்வாறு “விக்கிலீக்ஸ்’ வெளியிட்ட ரகசிய ஆவணங்கள் கூறியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *