புதுடில்லி: டீசல் விலை நிர்ணயத்தை மாற்றியமைப்பது தொடர்பாக, மத்திய நிதிஅமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் குழு கூடி முடிவு எடுக்கும் என, மத்திய எண்ணெய் துறை செயலர் சுந்தரேசன் கூறினார்.
பெட்ரோல், டீசல் விலையை இதுவரை மத்திய அரசு நிர்ணயித்து வந்தன. கடந்த ஜூன் மாதம் முதல், பொதுத்துறை நிறுவனங்களே முடிவு செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதன்படி, கடந்த ஜூன் 26ம் தேதி முதல் இதுவரை பெட்ரோல் விலை மட்டும் ஐந்து முறை மாற்றியமைக்கப்பட்டது. டீசல் விலையை மட்டும் ரூ.2 மட்டுமே தற்காலிகமாக உயர்த்திக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டது. அதன் பின், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பியது. விலை நிர்ணயிக்கும் முடிவு அரசிடம் இருந்து போன பிறகு, கச்சா எண்ணெய் விலை குறையுமென எதிர்பார்த்ததற்கு மாறாக அதிகரித்தது. கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி, அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் குழு விடுத்துள்ள அறிவிப்பில், டீசல் விலை விரைவில் சந்தை நிலவரத்திற்கே மாற்றியமைக்கப்படும்’ என அறிவித்தது. தற்போது பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் டீசல் விலையை லிட்டர் ஒன்றுக்கு, இறக்குமதி விலையை விட ரூ.4.71 குறைவாக வழங்கி வருகின்றன. எண்ணெய் நிறுவனங்கள் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாற்றிமைக்கும்
பட்சத்தில், டீசல் விலை அதிகரிக்கும். இது, அனைத்து துறைகளையும் பாதிக்கும் என்ற கருத்து நிலவுகிறது. டீசல் விலையை உயர்த்தக் கூடாது; அரசு முடிவு செய்ய வேண்டும் என, சமீபத்தில் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் நடத்தினர். தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், கோடிக்கணக்கான நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் எண்ணெய் நிறுவனங்கள் திணறி வருகின்றன. உடனடியாக டீசல் விலையை உயர்த்தக் கோரி வருகின்றன. இது குறித்து மத்திய எண்ணெய் துறைச் செயலர் சுந்தரேசன் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: டீசல் விலை நிர்ணயத்தை மாற்றியமைப்பது தொடர்பாக இப்போதைக்கு அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் குழுவுக்கு கொண்டு செல்வதாக இல்லை. இருப்பினும், இப்போது எண்ணெய் நிறுவனங்கள் சந்தித்து வரும் நஷ்டத்தை ஏற்கும் நிலையில் அரசு இல்லை. அவ்வாறு செய்தால், பெரும் கடன் சுமை ஏற்படும். இருப்பினும், வாடிக்கையாளர்களை பாதிக்காத வகையில் எப்படி சமாளிப்பது என்பது பற்றியும் அரசு யோசித்து வருகிறது. விலையை முடிவு செய்ய வேண்டும் என்ற நிலை வரும் போது, அதிகாரம் பெற்ற அமைச்சர் குழு முடிவு செய்யும். இவ்வாறு சுந்தரேசன் கூறினார்.
Leave a Reply