புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணி தாமதம் : கோடை மின் பற்றாக்குறையை சமாளிப்பதில் சிக்கல்

posted in: மற்றவை | 0

மேட்டூர் : மேட்டூர் புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணிகள் நிறைவடையாத நிலையில், குறித்தபடி வரும் 2011 மார்ச் இறுதிக்குள் மின் உற்பத்தி துவங்க முடியாத நிலை உள்ளது. இதனால், கோடைக்கால மின்பற்றாக்குறையை சமாளிப்பதில், வாரியத்திற்கு நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேட்டூரில் 3,550 கோடி ரூபாய் செலவில், புதிதாக 600 மெகாவாட் அனல்மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி நடக்கிறது. இதில், ஜூன் 24, 2011ம் ஆண்டு, மின் உற்பத்தி துவங்கி, செப்., 24, 2011ல் மின் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டது. தற்போது, மேட்டூர் அனல்மின் நிலையம் கட்டுமான பணியில், 2,000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதில், உத்தர பிரதேசம், ஆந்திரா, ஒரிசா போன்ற வடமாநில தொழிலாளர்களே அதிகம் உள்ளனர். உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென, மேட்டூர் அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளூர் தொழிற்சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: மேட்டூர் புதிய அனல்மின் நிலையத்தில், கட்டுமான பணிகள் நடந்து கொண்டே இருக்கிறது. மின் நிலையத்திற்கு காவிரியில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுத்து வருவதற்காக, பாலம் கட்டும் பணி முடியவில்லை. கூலிங் டவர், பாய்லர் சர்வீஸ் ஸ்டேஷன், நிலக்கரி எடுத்து வருவதற்கான கன்வேயர் பெல்ட் அமைக்கும் பணி, நிலக்கரியை தூளாக்கும் டர்பன்கள் அமைக்கும் பணி, அனல்மின் நிலைய வளாகத்தில் ரோடு போடும் பணி என, எந்த ஒரு பணியும் முற்றுபெறவில்லை. பணி முடிந்து மின் உற்பத்தி துவங்க, இன்னமும் ஆறு மாதங்களுக்கு மேலாக வாய்ப்புள்ளது. பணி முடிய பல மாதங்கள் இருப்பதால், உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

கடந்த அக்., 14ம் தேதி, புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்த மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியதாவது: மேட்டூர் புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணியை துரிதப்படுத்தி, வரும் மார்ச் 2011க்குள் மின் உற்பத்தி துவங்க வேண்டும் என, பொறியாளர்களிடம் கூறியுள்ளோம். கோடைக்காலத்தில் தமிழகத்தில் மின் தேவை, மேலும் 3,000 மெகாவாட் அதிகரிக்கும். வரும் 2011 மார்ச் இறுதிக்குள், மேட்டூரில் 600 மெகாவாட், எண்ணூரில் 600 மெகாவாட், வள்ளூரில் 500 மெகாவாட் என, புதிய அனல்மின் நிலையங்கள் உற்பத்தி துவங்குவதன் மூலமும், நீர்மின் நிலையங்கள் மூலமும் 2,000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் கிடைக்கும். 2,000 மெகாவாட் மின்சாரம், வெளிமாநிலம் அல்லது மத்திய அரசிடம் இருந்து கொள்முதல் செய்வதன் மூலம், கோடைக்காலத்தில் கூடுதலாக தேவைப்படும் 3,000 மெகாவாட் மின்தேவை பூர்த்தி செய்யப்படும். இவ்வாறு ஆற்காடு வீராசாமி கூறினார். ஆனால், மேட்டூர் புதிய அனல்மின் நிலையத்தில், மார்ச் 31க்குள் மின் உற்பத்தியை துவங்குவதற்கான சாத்தியம் குறைவாக இருப்பதால், கோடை காலத்தில் 3,000 மெகாவாட் மின் பற்றாக்குறையை சமாளிப்பதில், வாரியத்திற்கு நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *