ஊழலை பற்றி கவலைப்படவில்லை பிரதமர் : அத்வானி

posted in: அரசியல் | 0

புதுடில்லி : “தனது அமைச்சரவையில் நடந்த ஊழல் பற்றி கவலைப்படுவதற்கு பதிலாக, டெலிபோன் பேச்சுகள் மீடியாக்களுக்கு கசிந்தது குறித்துதான், பிரதமர் அதிகம் கவலைப்படுகிறார்.

மத்திய அமைச்சரவையில் யார், யார் இடம் பெறலாம் என்பதை பிரதமருக்கு பதிலாக, தொழில் அதிபர்கள் தான் முடிவு செய்துள்ளனர் என்பதும் டெலிபோன் டேப் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது’ என, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி காட்டமாக கூறியுள்ளார்.

தே.ஜ., கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறியதாவது:டெலிபோன் பேச்சுகள் டேப் செய்யப்படுவதில் கார்ப்பரேட் உலகத்தினருக்கு பதட்டம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் கவலைப்படுகிறார். அவர் இதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் என்ன என்பது புரியவில்லை.தனது அமைச்சரவையில் நடந்த ஊழல் பற்றி கவலைப்படுவதற்கு பதிலாக, டெலிபோன் பேச்சுகள் கசிந்தது குறித்துதான், பிரதமர் அதிகம் கவலைப்படுகிறார். நாட்டில் உள்ள சாதாரண மக்கள், மத்திய அரசின் நம்பகத் தன்மை குறித்து கவலைப்படுகின்றனர். ஆனால், பிரதமர் இது குறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை.ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை அமைப்பதில் பிரதமருக்கு எந்த பங்கும் இல்லை என்பது, டெலிபோன் பேச்சு வெளியில் கசிந்ததன் மூலம் தெரியவந்துள்ளது. அரசை அமைப்பதற்கும், யாரை அமைச்சர்களாக நியமிக்க வேண்டும் என்பதையும் தொழில் அதிபர்கள் தான் முடிவு செய்துள்ளனர்.

யாருக்கு எந்த இலாகா ஒதுக்க வேண்டும் என்பதை அவர்கள் தான் தீர்மானித்துள்ளனர். மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பது உட்பட பல முக்கிய நடவடிக்கைகள் பிரதமருக்கு தெரியவில்லை.ஸ்பெக்ட்ரம் ஊழலில் விசாரணை வேண்டுமென்றும், அதற்காக பார்லிமென்டின் கூட்டுக்குழு அமைக்க வேண்டுமென்றும் எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. ஆனால், கூட்டுக்குழு வேண்டாம் என்பதற்கு ஆளும் கட்சி தரப்பில் இதுவரை எந்த ஒரு நியாயமான காரணமும் கூறப்படவில்லை. பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பி போராடவில்லை என்றால், அமைச்சர் பதவியை ராஜா ராஜினாமா செய்திருப்பாரா? இத்தனை விஷயங்கள் அடுத்தடுத்து நடந்திருக்குமா என்றால், அதற்கு வாய்ப்பே இருந்திருக்காது என்றே கூறலாம். ஆனாலும், இதுவரைக்கு நடந்தவை மட்டுமே எங்களுக்கு திருப்தியை அளித்துவிடாது.

இந்த ஊழல் பணம் எல்லாம் எங்கே போனது. யார் பயனாளிகள் என்பது நாட்டு மக்களுக்கு தெரிந்தாக வேண்டும். ராஜாவை மட்டும் குற்றம் சொல்லாமல், இந்த பயனாளிகள் யார் என்பதை வெளியில் கொண்டு வர வேண்டும். அந்த பயனாளிகள் யார் என்பதை மறைக்கவே காங்கிரஸ் முயற்சி செய்கிறது. அதனால்தான் பார்லிமென்டின் கூட்டுக்குழு விசாரணை வேண்டுமென்ற கோரிக்கையை அக்கட்சி ஏற்க மறுக்கிறது. எல்லா கட்சிகளுமே கூட்டுக்குழு வேண்டுமென்று கேட்கின்றன. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளான தி.மு.க., – திரிணமுல் உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் கூட்டுக்குழு விசாரணை அமைக்கலாம் என்றே கூறுகின்றன. காங்கிரஸ் மட்டுமே மாறுபடுகிறது. இவ்விஷயத்தில் ஆளும் கூட்டணி பிளவு பட்டுள்ளது. மொத்தத்தில் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., பங்கேற்பா? கூட்டுக்குழு விசாரணை வேண்டுமென்று வலியுறுத்தி, நாடு முழுவதும் வரும் 22ம் தேதி முதல் பேரணிகள், பொதுக்கூட்டங்களை தே.ஜ., கூட்டணி நடத்த முடிவு செய்துள்ளது. லூதியானா, மும்பை, போபால், ஆமதாபாத், சென்னை போன்ற நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வும் இதில் பங்கேற்குமா என்பது பற்றி இப்போது கூறமுடியாது. எனினும் இவ்விஷயத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுடன் தே.ஜ., கூட்டணி தொடர்பில் உள்ளது.அதே போல், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக தாமசை நியமிப்பதற்கு லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் எதிர்ப்பு தெரிவித்தார். அந்த எதிர்ப்பையும் மீறி, அவரை ஊழல் கண்காணிப்பு ஆணையராக பிரதமர் நியமித்துள்ளார்.இவ்வாறு அத்வானி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *