பிப்ரவரி 27-ம் தேதி விஏஓ தேர்வு!-டிஎன்பிஎஸ்ஸி அறிவிப்பு

posted in: மற்றவை | 0

சென்னை: கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வு பிப்ரவரி 27-ல் நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2 ஆயிரத்து 400 கிராம நிர்வாக அலுவலர்
பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கை சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.

மேலும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களுக்கும் சேர்த்து தேர்வு நடத்தப்படும் என அறிவிப்புச் செய்யப்பட்டது. இதன்படி புதிதாக 831 காலி இடங்கள் சேர்க்கப்பட்டு மொத்த பணி இடங்களின் எண்ணிக்கை 3,484 ஆக உயர்த்தப்பட்டது.

தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி கடைசி நாள் என்றும், தேர்வுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தத் தேர்வுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே என்பதால் பல்வேறு தரப்பினரும் தேர்வில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தேர்வு தேதி அறிவிப்பு:

தேர்வு தேதி அறிவிக்கப்படாத நிலையில், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தனர். இந்த நிலையில், பிப்ரவரி 27-ம் தேதி தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தேர்வு ஒரே தாளாக இருக்கும். பொது அறிவுப் பிரிவில் 100 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது ஆங்கிலப் பாடத்தில் 100 வினாக்களும் கேட்கப்படும் (இரண்டுமே பத்தாம் வகுப்பு தரம்).

இரு பிரிவுகளுக்கும் 150 மதிப்பெண்கள் வீதம், மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்வுக்குத் தகுதி பெற 90 மதிப்பெண்கள் பெறுவது அவசியம். காலை 10 மணிக்குத் தொடங்கும் தேர்வு 3 மணி நேரம் நடைபெறும்.

காலி இடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டு இருப்பதால் புதியவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வி.ஏ.ஓ. தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 28-ந் தேதி மாலை 5.45 மணி ஆகும். ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் 26-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. வி.ஏ.ஓ. தேர்வுக்கு நேர்முகத்தேர்வு கிடையாது. எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே பணி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *