சென்னை : இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் வீடு மற்றும் அலுவலகத்தில் சி.பி.ஐ., நடத்திய ரெய்டில், 74 லட்சம் ரூபாய் பணம் மற்றும் சட்டக் கல்லூரிகளுக்கான ஆய்வறிக்கைகள் கைப்பற்றப்பட்டன.
டில்லி அருகில் உள்ள காசியாபாத் பகுதியில் உள்ள சட்டக் கல்லூரியில் புதிய படிப்புகள் துவங்க விண்ணப்பிக்கப்பட்டது. கல்லூரியை பார்வையிட்டு, அறிக்கை சமர்ப்பிக்க இந்திய பார் கவுன்சில் உறுப்பினர், ராஜிந்தர் சிங் ராணா என்பவர் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக சி.பி.ஐ.,க்கு தகவல் கிடைத்தது. ராஜிந்தர் சிங்கை கைது செய்த சி.பி.ஐ., அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்திய பார் கவுன்சிலின் துணைத் தலைவர் தனபால் ராஜிற்கும் இதில் தொடர்புடையது தெரிந்தது. இதையடுத்து, சென்னையில் பாரிமுனையில் உள்ள தனபால் ராஜின் அலுவலகம் மற்றும் மயிலாப்பூரில் உள்ள வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று முன்தினம், திடீர் சோதனை நடத்தினர். சோதனையில், 74 லட்ச ரூபாய் பணம் மற்றும் பல்வேறு சட்டக் கல்லூரிகள் தொடர்பான ஆய்வறிக்கைகளின் நகல்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் முன் இன்று ஆஜராகும்படி, தனபால் ராஜுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டில் தனபால் ராஜ், முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: டில்லியில் பார் கவுன்சில் உறுப்பினர் ராஜிந்தர் சிங் ராணா என்பவரை சி.பி.ஐ., கைது செய்துள்ளது. பார் கவுன்சில் துணைத் தலைவர் என்ற முறையில், எனது (தனபால்ராஜ்) வீட்டில் சோதனை நடந்தது. பார் கவுன்சில் உறுப்பினரின் ஊழியர் ஆதிகேசவலு என்பவர் வைத்திருந்த பையில், 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. படுக்கை அறையில், 60 ஆயிரம் ரூபாய் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. எனது உறவினர் சந்திரசேகரின் வீட்டில் சோதனை நடந்தது. அங்கு 45 லட்சம் ரூபாய் கைப்பற்றியுள்ளனர். வரும் 22ம் தேதி (இன்று) சி.பி.ஐ., முன் ஆஜராக எனக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. சோதனையின் போது ஒத்துழைப்பு அளித்தேன். கைப்பற்றப்பட்ட பணத்துக்கு எங்களிடம் கணக்கு உள்ளது. நிலம் வாங்குவதற்காக அந்தப் பணத்தை வைத்திருந்தோம். உறவினர் சந்திரசேகரின் வீட்டில் கைப்பற்றிய பணம், அவர்கள் குடும்பத்துக்கு சொந்தமானது. அதற்கான முறையான கணக்கும் அவர்களிடம் உள்ளது. சி.பி.ஐ., கோரினால் விளக்கம் அளிக்க தயாராக உள்ளனர். விசாரணைக்கும் ஒத்துழைக்க தயாராக உள்ளனர். 30 ஆண்டுகள் வக்கீல் தொழிலில் உள்ளேன். மத்திய, மாநில அரசுகளுக்கு ஆஜராகியுள்ளேன். கோர்ட் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்கிறேன். எங்களை சி.பி.ஐ., கைது செய்யக் கூடும். இந்த வழக்கில் எங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் பால்கனகராஜ் வாதாடினார். சி.பி.ஐ., தரப்பில் சந்திரசேகர் ஆஜரானார். நீதிபதி அருணா
ஜெகதீசன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்களுக்கு நான்கு வாரங்களுக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. இரண்டு வங்கி லாக்கர்களை மனுதாரர்கள் அணுகக் கூடாது. தேவைப்படும் போது, விசாரணைக்கு மனுதாரர்கள் ஆஜராக வேண்டும். விசாரணையில் குறுக்கிடக் கூடாது. இவ்வாறு நீதிபதி அருணா ஜெகதீசன் உத்தரவிட்டுள்ளார்.
Leave a Reply