புதுடில்லி : “வெங்காயத்தின் விலை அடுத்த இரண்டு, மூன்று வாரங்களில் குறையும்’ என, மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திடீர் விலை உயர்வை கட்டுப்படுத்த காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தவறிவிட்டதாக பா.ஜ., – கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரிணமுல் காங்., உள்ளிட்ட கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. அடுத்த மூன்று வாரங்களில் விலை குறையும் என்ற தகவல் மக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன், கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை வைத்து விற்பனை செய்யப்பட்ட வெங்காயம், நேற்று கிலோ விலை ரூ.100 வரை உயர்ந்தது. உணவின் முக்கிய அம்சமான வெங்காயத்தின் விலைஉயர்வு பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.வடமாநிலங்களில் பெய்த திடீர் மழையால், வெங்காயப் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துவிட்டதே இதற்கு முக்கிய காரணம் என கூறப்பட்டது. அதுபோல், வெளிநாடுகளுக்கு தாராளமாக ஏற்றுமதி செய்யப்பட்டதும் மற்றுமொரு காரணமாக கருதப்பட்டது.இந்த சூழலில், உள்நாட்டின் தேவையைக் கருத்தில் கொண்டு, நேற்று முன்தினம் முதல், வரும் ஜனவரி 15ம் தேதிவரை வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்ததாக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்திருந்தார்.இந்த சூழலில், “இமாலய அளவிற்கு திடீரென உயர்ந்துள்ள வெங்காயத்தின் விலை, அடுத்த இரண்டு, மூன்று வாரங்களில் குறையும்’ என, மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார் தெரிவித்துள்ளார். காத்திருந்தால் விலை குறையும் என்ற தொனியில் கருத்து தெரிவித்தார்.
டில்லியில் நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:வெங்காய தேவையைக் கருத்தில் கொண்டு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் எண்ணம் எதுவும் தற்போதைக்கு இல்லை. வெங்காயம் அதிகமாக விளையும் மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் கடந்த நவம்பரில் பெய்த தொடர் மழையால் பெரும்பாலான பயிர்கள் சேதமடைந்துவிட்டன. இதனால் தான் இந்த விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப்பிரதேச மாநிலங்களிலிருந்து வெங்காயம் வரவழைக்கப்பட்டு பிற பகுதிகளுக்கு அனுப்பப்படும். இதன் காரணமாக, அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் வெங்காயத்தின் விலை குறையும். இவ்வாறு சரத் பவார் கூறினார்.
பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி: இதற்கிடையே, வெங்காயத்தின் விலையில் திடீர் ஏற்றம் ஏற்பட்டதையடுத்து, சில வியாபாரிகள், பாகிஸ்தானிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ளனர். இதையடுத்து, லாரி ஒன்றுக்கு ஐந்து முதல் 15 டன் வெங்காயம் வீதம் 15 லாரிகளில் நேற்று வெங்காயம் வந்திறங்கியது. இது டில்லி, பஞ்சாபில் விலை சற்றுகுறைய உதவும்.
அரசியல் கட்சிகள் கண்டனம்: வெங்காய விலை உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. விலைஉயர்வு விஷயத்தில் தாமதமாக அரசு கையாளும் நடைமுறையை பா.ஜ., குறை கூறியது. காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மார்க்கெட் ஆதிக்க சக்திகளிடம் முற்றிலும் சரணடைந்துவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் ராஜா குறை கூறினார். பால், பெட்ரோல் ஆகியவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கூறுகையில், “மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை மற்றும் நிர்வாக சீர்கேடு போன்றவற்றால் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது’ என்றார்.மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், மத்திய அரசின் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரிணமுல் காங்., கட்சியும் வெங்காய விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெங்காயம் விலை
சென்னை – ரூ.80 முதல் ரூ.100
கோவை – ரூ.65
மதுரை – ரூ.80
தேனி – ரூ.80
திண்டுக்கல் – ரூ.80
நெல்லை – ரூ.70
சின்ன வெங்காயம் கிலோ 40 ரூபாய்க்கும் மேல் உயர்ந்தது.மேலும், பெரிய வெங்காயம் எனப்படும் பெல்லாரி வெங்காயம் அதிக விலை விற்பதால், ஓட்டல்களில் உள்ள உணவுப்பண்டங்களில் வெங்காயம் அரிதாகிவிட்டது.
Leave a Reply