வாஷிங்டன் : “பாகிஸ்தான் இந்தியா மீது அணுகுண்டு சோதனை நடத்துமானால், இந்தியா அந்நாட்டை அடித்து நொறுக்க வேண்டி வரும்’ என்று அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய், அமெரிக்கத் தூதரிடம் கூறியதாக, அமெரிக்காவின் பழைய ஆவணம் ஒன்று கூறியுள்ளது.
அமெரிக்க அரசு, கடந்தகால வெளியுறவுக் கொள்கைகள் பற்றிய தனது ஆவணங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. நேற்று முன்தினம் அமெரிக்க அரசு வெளியிட்ட 1979, ஜூன் மாதத்திய ஆவணத்தில், அப்போதைய இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கும், அமெரிக்கத் தூதர் ராபர்ட் எப் கோகீனுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இருவரது சந்திப்பும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தனிப்பட்ட ரீதியில் நடந்தது. கோகீன், தேசாயை தனிப்பட்ட முறையில் சந்திக்கும்படி வெள்ளைமாளிகை அவரை அறிவுறுத்தியிருந்தது.அப்போதைய காலகட்டத்தில் பாகிஸ்தான் அணு ஆயுதத் தயாரிப்புக்காக பரிசோதனையில் ஈடுபட்டிருந்தது. அதனால் பாகிஸ்தானின் அணுசக்தி குறித்து கவலை கொண்ட அமெரிக்கா, அதை திசை திருப்பி விடுவதற்காக இந்தியாவின் உதவியை நாடியது. அதற்கு உதவி செய்வதாக கோகீன் வெள்ளைமாளிகைக்குத் தெரிவித்திருந்தார். அதையொட்டி இந்த தனிப்பட்ட சந்திப்பு நடந்தது.
இதுகுறித்து அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:இந்தியா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது, ஆயுதங்களைப் பெருக்கக் கூடாது என்பதில் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு விருப்பமில்லை.அதேநேரம், பாகிஸ்தான் இந்த கருத்தை ஒப்புக் கொண்டு முன்வந்தால், இருநாடுகளும் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளலாம் என்று தேசாய் கூறினார்.அதேநேரம், வழக்கமான ஒப்பந்தமாக அது இருக்கக் கூடாது என்றும், அணுஆயுதங்கள் இல்லாத பகுதி என்ற கருத்தில், தனக்கு உடன்பாடில்லை என்றும் தேசாய் அவரிடம் கூறினார்.அணுகுண்டு பரிசோதனை செய்ய, பாகிஸ்தான் தயாராகும் பட்சத்தில் அதை அடித்து நொறுக்கி விடுவதாக தேசாய் கூறினார்.
சமீபத்தில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா நவாசிடம், இந்தியா பாகிஸ்தானைப் பற்றி நல்ல நோக்கத்துடன் இருப்பதாகவும், அதற்கு பிரச்னைகளைக் கொடுக்க விரும்பவில்லை எனவும், அதேநேரம், பாகிஸ்தான் ஏதாவது தில்லுமுல்லுகளில் இறங்கினால் அடித்து நொறுக்கி விடுவதாகவும் தெரிவித்ததாக, மொரார்ஜி தேசாய், கோகீனிடம் தெரிவித்தார்.கடந்த 1965 மற்றும் 1971களில், பாகிஸ்தான் ஏதாவது எரிச்சலூட்டும் விதத்தில் நடந்தால், இந்தியா பதிலடி கொடுக்கும் என்று ஷாநவாசிடம் தேசாய் எச்சரித்திருந்ததை கோகீன் நினைவுபடுத்திக் கொண்டார்.இவ்வாறு அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply