மேட்டூர் : “”மேட்டூர் அணை உபரி நீரை சேலம் மாவட்டத்தின் வறட்சியான பகுதிகளுக்கு திருப்பி விடுவதன் மூலம், வருங்காலத்தில் பல்வேறு நடைமுறை பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்,” என, காவிரி தொழில்நுட்ப குழு ஆலோசகர் மோகன கிருஷ்ணன் தெரிவித்தார்.
மேட்டூர் அணை நிரம்பி, காவிரியில் வீணாக வெளியேற்றப்படும் உபரி நீரை, சேலம் மாவட்டத்தின் வறண்ட பகுதிகளுக்கு திருப்பி விட்டால், பல ஆயிரம் ஏக்கர் பாசன வசதி கிடைக்கும். அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது, சேலம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. மேட்டூர் அணை நிரம்பிய பிறகு, உபரி நீரை சேலம் மாவட்டத்தின் வறண்ட பகுதிகளுக்கு திருப்பி விட 1,100 கோடி ரூபாயில் திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாக, வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்தார். மேட்டூர் அணை உபரிநீரை பாசனத்திற்கு திருப்பி விட்டால், வருங்காலத்தில் பல்வேறு நடைமுறை பிரச்னைகள், சிக்கல்கள் உருவாகும் என, காவிரி தொழில்நுட்ப குழு ஆலோசகர் மோகனகிருஷ்ணன் கூறினார். மேட்டூர் அணை மேல்பகுதியில் தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் இடையே 64 கி.மீ., தூரமுள்ள காவிரியில், ஏராளமான நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இப்பகுதியில், “நேஷனல் ஹைட்ரோ பவர் கார்ப்பரேஷன்’ (என்.எச்.பி.சி.,) தலா 255 மெகாவாட் வீதம், 1,020 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் நான்கு கதவணை தடுப்பு மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க முடிவு செய்தது. காவிரியின் ஒரு கரையில் தமிழக வனப்பகுதியும், மறுகரையில் கர்நாடக வனப்பகுதியும் இருப்பதால், கதவணை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில், என்.எச்.பி.சி., தமிழக அரசு, கர்நாடக அரசு கையெழுத்திட வேண்டும். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, கர்நாடக அரசு, காவிரியில் வெளியேற்றும் நீரை அளவீடு செய்து, மேட்டூர் அணைக்கு திறந்து விடும் வகையில் கதவணை தடுப்பு மின் உற்பத்தி நிலையம் அமைக்க, தமிழக அரசும் ஒப்புதல் அளித்தது. இரு மாநிலங்களுக்கு இடையே மின் உற்பத்தி நிலையம் அமைத்தால் தமிழகம், கர்நாடகா மட்டுமின்றி பிற மாநிலங்களும் பயன்பெற முடியும். ஆனால், கர்நாடக அரசு ஒப்புதல் அளிக்க மறுத்து விட்டதால், 17 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய இந்த திட்டத்தை, இன்னமும் நிறைவேற்ற முடியவில்லை. இரு மாநிலங்களுக்கு இடையே நீர்மின்நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடகா, மேட்டூர் அணை மேல்பகுதியில் தங்கள் எல்லைக்குள் உள்ள காவிரியின் குறுக்கே, நீர்மின் நிலையம் அமைக்க முடிவு செய்தது. அதற்காக மேட்டூர் அணை மேல்பகுதியில் உள்ள சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, மேகதாது பகுதியில், காவிரியின் குறுக்கே சொந்தமாக நீர்மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது, தமிழக அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேட்டூர் அணையை நேற்று பார்வையிட்ட காவிரி தொழில்நுட்ப குழு ஆலோசகர் மோகனகிருஷ்ணன் கூறியதாவது: இரு மாநிலங்களுக்கு இடையிலான காவிரி நீர்வரத்து பகுதியில் நீர்மின் நிலையம் அமைக்க கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்கிறது. அதேநேரம் தங்கள் பகுதியில் உள்ள சிவசமுத்திரம், மேகதாது பகுதியில் சொந்தமாக கதவணை நீர்மின் உற்பத்தி நிலையம் அமைக்க முயற்சிப்பது வேதனை அளிக்கிறது. எனவே, இதற்கு தடை விதிக்கக் கோரி, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மோகன கிருஷ்ணன் கூறினார்.
Leave a Reply