புதுடில்லி : “”தொலைத்தொடர்பு துறையின் வளர்ச்சியை பேணிக் காக்க, நாட்டில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கும், சமமான வாய்ப்பு கிடைப்பது உறுதி செய்யப்படும்,” என, மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.
மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் நேற்று முன்தினம் ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் பாரதி மிட்டல், டாடா டெலிசர்வீசஸ் தலைவர் ரத்தன் டாடா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் அனில் அம்பானி ஆகியோரை சந்தித்து பேசினார்.
பின்னர் நிருபர்களிடம் கபில் சிபல் கூறியதாவது: தொலைத்தொடர்பு துறையின் வளர்ச்சி பேணி காக்கப்படும். அதனால், தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் அனைவருக்கும், சமமான வாய்ப்பு கிடைப்பது உறுதி செய்யப்படும். எந்த தொழில்நுட்பத்தில் அவர்கள் செயல்படுகின்றனர் என்பதை கருத்தில் கொள்ளாமல், பாரபட்சமற்ற அணுகுமுறை அனைவரிடமும் பின்பற்றப்படும். தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், போதுமான அளவுக்கு அவற்றுக்கு அலைவரிசைகளை அளிக்கவும் அரசு தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்படும். உண்மையில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை பற்றாக்குறை உள்ளது. எனவே, ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கான தொகையை உயர்த்த வேண்டியது அவசியம். இவ்வாறு கபில் சிபல் கூறினார். வரும் நாட்களில் மேலும் பல நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்துப் பேசவும் அமைச்சர் கபில் சிபல் திட்டமிட்டுள்ளார்.
Leave a Reply