விருதுநகர் : ஆவின் ஊழியராக்கக் கோரி, பால் கூட்டுறவு சங்க ஊழியர்கள், டிச., 30ல் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் 17 லட்சம் லிட்டர் பால் வினியோகம் ஸ்தம்பிக்கும் அபாயம் உள்ளது. தமிழக கிராமங்களில், பிரதம பால் கூட்டுறவு சங்கங்களில் இருந்து, பாலை சேகரித்து ஆவினுக்கு சப்ளை செய்யும் பணியில் 24 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு மாதம் அதிகபட்சமாக 3,000 முதல் 5,000 ரூபாய் வரை மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. வேறு எந்த பணப்பலன்களும் கிடையாது. ஆவின் காலிப்பணியிடங்களில் தங்களை நியமிக்க வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். செப்., 8ல் திருச்சியில் நடந்த தி.மு.க., மாநாட்டில், பால் கூட்டுறவு சங்க பணியாளர்களை ஆவின் ஊழியர்களாக அறிவிப்போம் என தெரிவிக்கப்பட்டது. இன்று வரை நடைமுறைக்கு வரவில்லை. அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மாவட்ட தலைநகர்களில் நேற்று உண்ணாவிரதம் நடந்தது. வரும் 30ல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். இதுகுறித்து இச்சங்க மாவட்ட செயலர் ராமச்சந்திரன் கூறியதாவது: பால் கூட்டுறவு பணியாளர்களை வைத்தே மாவட்ட ஆவின், மாநில இணையம் செயல்பட்டு வருகிறது. நாங்கள் பால் உற்பத்தி செய்து சேகரிக்கவில்லை என்றால், நாள் ஒன்றுக்கு 17 லட்சம் லிட்டர் பால் வினியோகம் ஸ்தம்பிக்கும். ஆவின் பணியாளர்களாக அறிவிக்கும் வரை தொடர் போராட்டங்கள் நடத்தவுள்ளோம். இவ்வாறு ராமச்சந்திரன் கூறினார்.
Leave a Reply