சேலம் : “”சேலத்தில் ஜனவரி 9ம் தேதி நடக்கும் மாநில மாநாட்டில், கூட்டணி குறித்து தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்த் அறிவிப்பார்,” என, தே.மு.தி.க., மாநில இளைஞர் அணி செயலர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.
சேலத்தில், ஜனவரி 9ம் தேதி நடக்க உள்ள தே.மு.தி.க.,வின், “மக்கள் உரிமை மீட்பு மாநில மாநாடு’ குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் மாநில இளைஞர் அணி செயலர் சுதீஷ் பேசியதாவது: சேலத்தில் ஜனவரி 9ல் நடக்கும், தே.மு.தி.க.,வின் மாநில மாநாடு அரசியல் வரலாற்றில் புது திருப்பத்தை ஏற்படுத்தும். இது தே.மு.தி.க.,வின் கட்சி மாநாடு அல்ல; தமிழக மக்களின் உரிமை மீட்பு மாநாடு. அதில் கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ள உள்ளனர். சேலம் மாநாட்டுக்காக, சென்னையில் இருந்து சேலத்துக்கு சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தே.மு.தி.க.,வின் ஒரு பேனர் கிழிக்கப்பட்டால், அதே இடத்தில் 100 பேனர்களை வையுங்கள். சேலத்தில் நடக்கும் மாநில மாநாட்டில், தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்த், கூட்டணி குறித்து அறிவிப்பார். தமிழகத்தில் ஊழல், வறுமையற்ற ஆட்சியை அமைக்க விஜயகாந்தால் மட்டுமே முடியும். சேலத்தில் 1967ல் மாநாடு நடத்திய முதல்வர் கருணாநிதியும், 1972ல் மாநாடு நடத்திய முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆகியோரும் தமிழக முதல்வர் ஆகினர். அதே போல் 2011ல் மாநாடு நடத்த உள்ள விஜயகாந்த், 2011ல் தமிழக முதல்வராவார். இவ்வாறு சுதீஷ் பேசினார்.
Leave a Reply