சென்னை: அன்று அண்ணாவுக்குத் துரோகம் செய்தார் ஈ.வி.கே. சம்பத். இன்று எங்கேயோ காசு வாங்கிக் கொண்டு திமுக கூட்டணிக்குத் துரோகம் விளைவித்து வருகிறார் அவரது மகன் இளங்கோவன்.
இனியும் இளங்கோவன் உளறுவதை பொறுத்துக் கொண்டிருக்க மாட்டோம் என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது திமுக.
திமுகவின் இந்த எச்சரிக்கை முதல்வர் கருணாநிதியின் தளபதிகளில் ஒருவரான வீரபாண்டி ஆறுமுகத்தின் அறிக்கை மூலம் வந்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக பெரும் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறார் இளங்கோவன். மிகவும் பச்சை பச்சையாக அவர் திமுகவையும், முதல்வர் கருணாநிதியையும், கூட்டணியையும் விமர்சித்துப் பேசி வருகிறார். இருந்தாலும், கூட்டணி உடைந்து விடக் கூடாது என்பதற்காக இவற்றை பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது திமுக. ஆனால் தற்போது திமுகவின் பொறுமை கரையத் தொடங்கி விட்டதாக தெரிகிறது.
நேற்று வீரபாண்டி ஆறுமுகம் இளங்கோவனை கடுமையாக எச்சரித்து ஒரு அறிக்கை வெளியிட்டார்.
அதில், இளங்கோவனின் அரைவேக்காட்டுத்தனமான பேச்சுக்களையும், விமர்சனங்களையும் திமுக சகித்துக் கொண்டு அமைதியாக இருப்பதற்குக் காரணம், கட்சித் தலைவமையின் உத்தரவு மட்டுமே காரணம். ஆனால் எங்களது அமைதியை இளங்கோவன் கோழைத்தனமாக கருதி விடக் கூடாது.
யாரோ கொடுக்கும் கூலியை வாங்கிக் கொண்டு கூச்சலிடுவது இளங்கோவனுக்கு பழக்கமான ஒன்றுதான்.
இளங்கோவனின் சமீபத்திய கருத்துக்கள், பேச்சுக்கள் அவரது கட்சி எடுத்துள்ள நிலைக்கு முற்றிலும் முரண்பாடாக உள்ளது. இளங்கோவனின் தவறான அரசியல் பாதையின் பின்னணி, வரலாறு குறித்து காங்கிரஸ் தலைமைக்குத் தெரிந்திருக்காது என்று கருதுகிறேன். நீண்ட காலத்திற்கு முன்பு அவரது தந்தை ஈவிகே சம்பத், திமுக நிறுவனரான அண்ணாவுக்குத் துரோகம் இழைத்தார். திமுகவை அழிப்பேன் என்று சபதமிட்டார்.
இந்தப் பின்னணி கொண்ட இளங்கோவன் இனியும் திமுகவுக்கு எதிராக ஒரு வார்த்தை பேசினால் அதற்கான கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். அடுத்தமுறை இளங்கோவன் திமுகவை தேவையில்லாமல் விமர்சித்து எதையாவது உளறினால் அதற்கு தகுந்த பரிசை அவர் பெற வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார் வீரபாண்டி ஆறுமுகம்.
Leave a Reply