ராமேஸ்வரம்: கீழக்கரை அருகே 13 பேரை பலி கொண்ட படகு விபத்துக்கு, சுழலில் படகு சிக்கியதும், அதிக ஆட்களுடன் சென்றதுமே காரணம் என்று விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ளது பெரியபட்டனம் ஜலாலியா நகர். மீனவர் பகுதியான இப்பகுதியைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். விடுமுறைக்காக அவர்கள் ஊர் திரும்பியிருந்தனர்.
நேற்று அப்பா தீவு, வாழைத் தீவு உள்ளிட்டவற்றுக்கு சுற்றுலா செல்வதற்காக மோட்டார் பொருத்தப்பட்ட மீன்பிடி படகில் இரு குழுக்களாக சென்றனர். ஒரு படகில் ஆண்கள் ஏறிக் கொண்டனர். இன்னொரு படகில் பெண்களும், குழந்தைகளும் ஏறிக் கொண்டனர்.
இந்தப் படகு மன்னார் வளைகுடாப் பகுதியில் போய்க் கொண்டிருந்தபோது திடீரென பெண்கள், குழந்தைள் வந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 13 பேர் உயிரிழந்தனர்.
சீனி உருது என்பவரது மனைவி பாத்திமா (35) விபத்தில் பரிதாபமாக இறந்தார். அவருடன் பயணித்த அவரது மகள்களான தவ்பிகா(14), ஆசிகா(11) ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.
இவர்கள் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்துக் கூறுகையில்,
எங்களது படகில் பெண்கள், குழந்தைகள் என 38 பேர் இருந்தோம். படகில் சமையலுக்கு தேவையான பொருட்களுடன், ஒரு ஆடும் ஏற்றப்பட்டு இருந்தது. கரையில் இருந்து சிறிது தூரம் சென்றதும் பெரிய அலை சீறி எழுந்தது.
அலையின் சுழலில் சிக்கிய படகு தள்ளாடியது. இதில் நாங்கள் அங்கும், இங்குமாக ஒருவர் மீது ஒருவர் மோதி விழுந்தோம். கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென்று படகு கவிழ்ந்தது. பொருட்களும், ஆட்களும் அதிகமாக இருந்ததாலேயே கடலுக்குள் படகு கவிழ்ந்தது.
இதனால் அனைவரும் தண்ணீரில் மூழ்கினோம். நீச்சல் தெரியாததால் அளவுக்கு அதிகமாக தண்ணீரை குடித்து மயங்கினோம். பின்னர் கண்விழித்து பார்த்தபோது ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தோம். எங்களது தாய் பாத்திமா பர்ஜானா என்ன ஆனார் என்று தெரியாமல் சோகத்தில் ஆழ்ந்தோம். பின்னர் அவர் இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது என்றார்.
இந்த விபத்தில் கீழக்கரையை சேர்ந்த சீனிமுகமது, தனது மகன்கள் அப்துல் வகாப் (வயது 14) கலிலுர் ரகுமான்(12) ஆகியோரைப் பறி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சீனி முகமது கூறுகையில்,
எனது மூத்த மகன் அப்துல்வகாப் கீழக்கரை இஸ்லாமியா மேல் நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பும், 2-வது மகன் 6-ம் வகுப்பும் படித்து வந்தனர். ஏற்கனவே மனைவியை இழந்த நான் மகன்களுக்காவே வாழ்ந்து வந்தேன். பள்ளித் தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டதால் பெரியபட்டினத்தில் உள்ள எனது உறவினர்களுடன் தீவை சுற்றிப்பார்க்க மகன்களை அனுப்பிவைத்தேன். ஆனால் துரதிருஷ்டவசமாக படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் எனது மகன்கள் 2 பேரையும் பறி கொடுத்துவிட்டேன் என்று கூறி கதறி அழுதார்.
விபத்தில் சிக்கி கடலில் மூழ்கிய சிலரின் உடல்கள் இதுவரை கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட பகுதி சகதி நிறைந்ததாக உள்ளதால் உடல்கள் அதில் சிக்கியிருக்கலாம் என்று தெரிகிறது. இருப்பினும் தீவுப் பகுதிகளில் சில நாட்களில் உடல்கள் கரை ஒதுங்கலாம் எனத் தெரிகிறது.
இந்த சம்பவத்தால் பெரியபட்டணம் பகுதியே பெரும் சோகத்தில் மூழ்கிக் காணப்படுகிறது.
Leave a Reply