நில மோசடி புகாரில் சிக்கியுள்ள ஆந்திர முன்னாள் முதல்வர் ரோசய்யா மீது, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், ஐராபாத்தில் உள்ள அமீர்பேட்டையில், வணிக வளாகங்கள் மற்றும் பல்வேறு திட்டங்களுக்காக, அங்குள்ள ஒன்பது ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. இதற்காக, அந்நிலத்தின் உரிமையாளர்கள் ஜி.என்.நாயுடு உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அளித்து, அந்த நிலம் வாங்கப்பட்டது.இந்நிலத்தின் மதிப்பு தற்போது, 200 கோடி ரூபாய். இந்நிலையில், கடந்த ஜூலையில், ரோசய்யா முதல்வராக இருந்தபோது, இந்நிலத்தை கையகப்படுத்துவதற்கான நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டு, அந்த நிலம், அதன் உரிமையாளர்களிடம் அளிக்கப்பட்டது.இது தொடர்பாக, மோகன்லால் என்ற வக்கீல், லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
அதில், முதல்வர் ரோசய்யா, நில உரிமையாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டு, நிலம் கையகப்படுத்துவதற்கான நோட்டீசை திரும்பப் பெற்றுள்ளார்.நில உரிமையாளர்களுக்கு சாதகமாக சட்ட விரோதமாக முதல்வர் மற்றும் அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். அரசு கையகப்படுத்திய நிலத்தை, மறுபடியும் அதன் உரிமையாளர்களுக்கு திருப்பித் தரத் தேவையில்லை என்ற சட்டம் உள்ளது.ஆனால், சட்டம் மீறப்பட்டு, நில முறைகேடுகள் நடந்துள்ளது. எனவே, முன்னாள் முதல்வர் ரோசய்யா மற்றும் இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட், ஆந்திர முன்னாள் முதல்வர் ரோசய்யா உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், இதுதொடர்பான அறிக்கையை அடுத்த மாதம் 28ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.இது, அம்மாநிலத்தில், ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply