சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ் வழியில் எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்ற 1,100 மாணவர்களுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி லேப்-டாப் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தமிழ் வழியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி முதல் 1000 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.
மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடிதத்வர்களுக்கு இதுவரை தலா ரூ. 7 ஆயிரம், ரூ. 6 ஆயிரம் மற்றும் ரூ. 5 ஆயிரம் என வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகையை முறையே ரூ. 25 ஆயிரம், ரூ. 20 ஆயிரம் மற்றும் ரூ. 15 ஆயிரம் என உயர்த்தி முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.
இந்நிலையில் இன்று இந்த ஆண்டு முதல் 1,100 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு லேப்-டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ. 3 கோடியே 26 லட்சத்து 45 ஆயிரமாகும்.
கருணாநிதி முதல் கட்டமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 10 மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கினார். மேலும், அரசு பொது தேர்வில் 496 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடம் பிடித்த கன்னியாகுமாரி மாணவர் ஜோஸ்ரிஜனுக்கு ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலையை பரிசளித்தார்.
495 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது பிடித்த பாளையங்கோட்டை மாணவி ஹெப்சிபா பியூலா, மதுரை மாணவர் ஜேம்ஸ் மார்டின், கோபிசெட்டிபாளயைம் மாணவி சுஷ்மா, காவேட்டிப்பட்டி மாணவி அபிநயா, பட்டுக்கோட்டை மாணவர் துளசிராஜ் ஆகியோருக்கு தலா ரூ. 20 ஆயிரம் வழங்கினார்.
494 மதிப்பெண்கள் எடு்துத மாநில அளவில் மூன்றாவது இடம் பெற்ற அருப்புக்கோட்டை மாணவர் பாலச்சந்திரன், வேடசந்தூர் மாணவி உமா நந்தினி, கரூர் மாணவர் விமல் ஆகிய மூவருக்கும் தலா ரூ. 15 ஆயிரம் கொடுத்தார்.
அதே போல் மெட்ரிகுலேஷன் தேர்வில் முதலிடம் பிடித்த தூத்துக்குடி மாணவி பாலபிரிய தர்ஷனிக்கு (490) ரூ. 25 ஆயிரமும், 489 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவதாக வந்த காஞ்சீபுரம் மாணவர் தினேசுக்கு ரூ. 20 ஆயிரமும், 487 மதிப்பெண்கள் வாங்கி மூன்றாவது இடம் பெற்ற மதுரை மாணவி மிருணாஸ்ரீ, பெருந்துறை மாணவி சங்கவி ஆகியோருக்கு ரூ. 15 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கி பாராட்டினார்.
மொத்தம் 13 மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ. 2 லட்சத்து 45 ஆயிரம் வழங்கப்பட்டது. மாநில மற்றும் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ, மாணவியர்களின் படிப்பு செலவை அரசே ஏற்கும் என்பதற்கான சான்றிதழையும் முதல்வர் அவர்களிடம் வழங்கினார்.
பரிசுகளை பெற்ற மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
Leave a Reply