கோல்கட்டா : அத்தியாவசியப் பொருட்களின் விலை, ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதால், மத்திய அரசு அச்சம் அடைந்துள்ளது.
இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, “ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என, எதிர்க்கட்சிகள் பிடிவாதம் செய்வது சரியல்ல’ என்றும் குறை கூறியுள்ளார்.
சமீபகாலமாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை, அதிவேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. உணவுப் பணவீக்கம் அதிகரித்ததில் நாடு முழுவதும் உள்ள நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. கோபமும், அவர்களிடையே எழுந்துள்ளது. இதனால், மத்திய அரசு அச்சம் அடைந்துள்ளது.
கோல்கட்டாவில், மேற்கு வங்க மாநில காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இதுகுறித்து கூறியதாவது:விலைவாசி உயர்ந்திருப்பது மிகவும் கவலை அளிக்கும் விஷயம். இதை அரசு உணர்ந்துள்ளது. தற்போது நிலவும் விலை நிலவரம் குறித்து, அரசு கூர்ந்து கவனித்து வருகிறது. விலைவாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல் : ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவது சரியல்ல. இதற்காக, பார்லிமென்டை செயல்படவிடாமல் அவர்கள் முடக்கி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வரும்படி, எதிர்க்கட்சிகளுக்கு இரண்டு முறை அழைப்பு விடுத்தேன். சபாநாயகரும் ஒருமுறை அழைப்பு விடுத்தார். இதையும் மீறி, எதிர்க்கட்சிகள் பிடிவாதமாக உள்ளன.பிரச்னைகளை விவாதிப்பதற்காகவும், முடிவு எடுப்பதற்காகவுமே பார்லிமென்ட் உள்ளது. ஸ்பெக்ட்ரம் பிரச்னை குறித்து பார்மென்டில் முதலில் விவாதம் நடத்தலாம். இதன்பின், பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என, சபை முடிவு செய்தால், அதை ஏற்றுக் கொள்ள தயார்.நான் அரசியலுக்கு வந்து 41 ஆண்டுகள் ஆகிவிட்டன. பார்லிமென்டை செயல்படவிடமால் முடக்கும் இதுபோன்ற சம்பவத்தை, இதுவரை நான் கண்டது இல்லை.பார்லிமென்ட் செயல்படுவதற்காக கோடி கணக்கில் பணம் செலவிடப்படுகிறது. இது முற்றிலும் வீணடிக்கப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், பார்லிமென்ட் ஜனநாயகம் கேள்விக்குறியாகி விடும்.ஊழலுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தயங்குவதாக கூறுவது சரியல்ல. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக ஏற்கனவே விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரதமர் செயலுக்கு அதிருப்தி : ஸ்பெக்ட்ரம் விசாரணைக்காக, பொதுக் கணக்கு குழு முன் ஆஜராவதாக, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். எங்களை கலந்தாலோசிக்காமல் அவர் இவ்வாறு தெரிவித்து விட்டார். என்னிடம் இதுகுறித்து அவர் முன்பே பேசியிருந்தால், பொதுக் கணக்கு குழுவில் ஆஜராக வேண்டாம் என்று கூறியிருப்பேன்.சட்ட விதிமுறைப்படி, பிரதமர் என்பவர் லோக்சபாவுக்கு கட்டுப்பட்டவரே தவிர, தனிப்பட்ட எந்த ஒரு கமிட்டிக்கும் கட்டுப்பட்டவர் அல்ல. அமைச்சராக பதவி வகிப்பவர் கூட, பொதுக் கணக்கு குழுவில் ஆஜராக தேவையில்லை என கூறப்படுகிறது. இதற்கான காரணம் மிகவும் தெளிவானது. அமைச்சராக இருப்பவர், லோக்சபாவுக்கோ, சட்டசபைக்கோ தான் பதில் அளிக்க வேண்டுமே தவிர, எந்த ஒரு கமிட்டிக்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை. கூட்டுக் குழு விசாரணைக்கான அவசியத்தை அவர்கள் வலியுறுத்துவார்கள் என்றால், கூட்டுக் குழு விசாரணை ஏன் வேண்டாம் என்பதற்கான காரணத்தை நாங்கள் வலியுறுத்துவோம்.இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.
ராஜாவுக்கு ஆதரவு : மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதாவது:ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில், தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ராஜாவுக்கு எதிராக அனைவரும் புகார் கூறுகின்றனர். உண்மையில் கடந்த 1998ல் அப்போதைய தே.ஜ., கூட்டணி ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட கொள்கையைத் தான், ராஜா பின்பற்றினார். கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல் எறியக் கூடாது. தே.ஜ., கூட்டணி ஆட்சிக் காலத்தில் பின்பற்றப்பட்ட கொள்கைகளால், அரசுக்கு 1.45 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதைப் பற்றி எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது ஏன்?இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.
பிரதமருடன் மோதலா?முகர்ஜி கூறியுள்ளார். அம்மாதிரி ஆஜராகத் தேவையில்லை என்று கூறிய அவர் மேலும் கூறுகையில், “” பிரதமருடன் மோதல் இருப்பதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது. “2ஜி’ ஸ்பெக்ட்ரம் விவகாரத்தினால், பார்லிமென்டின் குளிர் கால கூட்டத் தொடர் முற்றிலும் செயல்படாமல் போய்விட்டது. பட்ஜெட் கூட்டத் தொடர் சுமுகமாக செயல்படும் என, நம்புகிறேன்,” என்றார்.
Leave a Reply