பெங்களூரு : தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், சாட்சிகளின் வாக்குமூலத்தை, மொழி பெயர்த்ததில் தவறு இருந்தால், விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீது, வருமானத்திற்கு அதிகமாக 66.65 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், முக்கிய சாட்சிகள் 10 பேரிடம், டிச., 15, 16 தேதிகளில் மறு விசாரணை செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் ஜெ.,க்கு எதிராகவும், தமிழக அரசுக்கு ஆதரவாகவும் தங்கள் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். நேற்று முன்தினம் நடந்த விசாரணையிலும் ஐந்து சாட்சிகள், முன்பு கொடுத்த வாக்குமூலத்திலிருந்து பல்டி அடித்தனர்.
நேற்று நடந்த விசாரணையில், ஜெயலலிதா பதவி காலத்தில் சென்னையில் பல்வேறு இடங்களில் கட்டடங்கள் கட்டியதாக கூறப்பட்ட புகார்களுக்கு, கட்டட மதிப்பீடு செய்து கொடுத்த பொதுப்பணித் துறை இன்ஜினியர்கள் கிருஷ்ணசாமி, பாஸ்கர், வேலாயுதம், ஜெயபால், கோவிந்தன் ஆகியோரிடம் மறுவிசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. நீதிபதி மல்லிகார்ஜூனய்யா தலைமையில் நேற்று விசாரணை ஆரம்பமானது.
ஜெ., தரப்பு வக்கீல் நவநீதகிருஷ்ணன், “மறு விசாரணை நடக்கும் போது, சாட்சிகள் தவிர மற்றவர்கள் நீதிமன்றத்திற்குள் இருக்க அனுமதிக்க கூடாது. விசாரணை அதிகாரிகளும், போலீசாரும் நீதிமன்றத்திற்குள் இருக்க அனுமதிக்க கூடாது’ என மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி, விசாரணை சாட்சியை தவிர, மற்றவர்கள் வெளியே செல்ல உத்தரவிட்டார். போலீசார், விசாரணை அதிகாரிகள் வெளியே செல்ல தேவையில்லை என்றும் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து நடந்த விசாரணையில், பொதுப்பணித் துறை இன்ஜினியர்கள் கிருஷ்ணசாமி, பாஸ்கரன் ஆகியோர், ஜெ., தரப்பிற்கு எதிராகவும், தமிழக அரசுக்கு ஆதரவாகவும் தங்கள் மறுவாக்குமூலத்தை பதிவு செய்தனர். மூன்றாவதாக, பொதுப்பணித் துறை இன்ஜினியர் வேலாயுதத்திடம் மறு விசாரணை நடத்தப்பட்டது. அவர், சென்னை ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில், ஜெ., மற்றும் சசிகலாவிற்கு சொந்தமான கட்டடம் 1994-95ல் கட்டப்பட்டதாக, 1998ல் நடந்த முதல் விசாரணையில் தெரிவித்திருந்தார். 2002ல் நடந்த இரண்டாம் கட்ட விசாரணையில், அந்த கட்டடம், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கட்டபட்டதாக கூறியிருந்தார்.
ஜெ., வக்கீல் நவநீதன்: 2002ல் நடந்த மறுவிசாரணையில் இன்ஜினியர் வேலாயுதம் தமிழில் கொடுத்த வாக்குமூலத்தில், இந்த கட்டடம் மூன்று மாதத்துக்கு முன் கட்டியிருக்கலாம் என கருதுகிறேன் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டதில், மூன்று மாதத்துக்கு முன்னர் கட்டியதாக உறுதியுடன் கூறுவதாக உள்ளது. இது மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட தவறு. இதுபோல் பல்வேறு இடங்களில் தவறு இருக்கிறது. எனவே, தமிழில் இருக்கும் அனைத்து வாக்குமூலங்களையும் மீண்டும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, பின் விசாரணை நடத்த வேண்டும். இதற்கு அரசு வக்கீல் ஆச்சார்யா ஆட்சேபனை தெரிவித்தார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, சாட்சி வேலாயுதம் இரண்டாம் கட்டமாக கொடுத்த வாக்குமூலத்தில், “தவறு இருக்கும் இடத்தை மட்டும் மீண்டும் மொழிபெயர்ப்பு செய்து, ஜன., 18ம் தேதி மறு விசாரணை நடத்தப்படும். இன்று விசாரணை நடத்தப்படாத இரண்டு சாட்சிகளிடம், ஏற்கனவே அறிவித்த ஐந்து சாட்சிகளையும் சேர்த்து, மொத்தம் எட்டு சாட்சிகளிடம் ஜன., 18ல் மறு விசாரணை நடத்தப்படும்’ என்றார்.
Leave a Reply