சென்னை: ராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல்லில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் இன்று தொடங்கியது. முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பர்னாலா உரை நிகழ்த்தினார்.
காலை 9.30 மணிக்கு ஆங்கிலத்தில் அமைந்த உரையை ஆளுநர் வாசிக்கத் தொடங்கினார்.
ஆளுநர் உரையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்:
– தமிழகத்தில் வனவளத்தைப் பாதுகாக்க ரூ.688 கோடி மதிப்பீட்டில் பசுமைத்திட்டம் செயல்படுத்தப்படும்.
– பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர அவசரச் சிகிச்சை திட்டம் ரூ.10கோடி செலவில் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும்.
– ராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.
– ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டுத் திரும்ப உரியவர்களிடம் ஒப்படைப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும்.
– கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ. 320 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
– வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மேலும் 10 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு ரூ. 950 கோடி செலவில் திட்டம் நிறைவேற்றப்படும்.
– திருவாரூர், தஞ்சை, கடலூரில் சிறப்பு வெள்ள மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படும்.
– நகர்ப்புற சாலைகளை மேம்படுத்த ரூ. 1051 கோடி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
– கன்னியாகுமரியில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி பல்கலைக்கழகம் தொடங்கப்படும்.
– ஏழைகளுக்கு கான்க்ரீட் வீடு கட்டித் தரும் திட்டத்தின் முதல் கட்டமாக 3 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.
– சத்துணவில் இனி பாமாயிலுக்குப் பதில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படும்.
– அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள் இணைக்கப்பட்டு அறிவியல் பெருநகர் உருவாக்கப்படும்.
– கிருஷ்ணகிரியில் தோட்டக்கலைப் பல்கலைக்கழகம் இந்த ஆண்டு தொடங்கப்படும்.
– வெளிநாடு வாழ் தமிழர்நலனுக்காக தனி வாரியம் அமைக்கப்படும்.
– தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பான முறையில் பராமரிக்கப்படுகிறது
– இலங்கைத் தமிழர்கள் அங்கு போர் முடிந்த பின்னரும் தொடர்ந்து இன்னலுக்குள்ளாகியுள்ளனர். அவர்களது குறை தீர்க்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
மேலும் ஆளுநர் தனது உரையில் தெரிவித்துள்ளதாவது…
தமிழகத்தில் திராவிடப்பண்பாட்டை கட்டிக்காத்து அயராது பாடுபட்டு 5 வது முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்துள்ள முதல்வர் கருணாநிதியை பாராட்டுகிறேன்.
தமிழர் திருநாளாம் பொங்கல் கொண்டாடும் தைத்திங்களை தமிழ் ஆண்டின் முதல் நாளாக கொண்டாட அறிவித்து தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார் முதல்வர் கருணாநிதி. இந்நாளில் மக்களுக்கு அரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய் கொண்ட பொங்கல்பை வழங்கி சிறப்பித்திருக்கிறார்.
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடததி, தமிழின் பெருமையை உயர்த்தி, தமிழ் வளர்ச்சி திட்டங்களை அறிவித்தார். இதில் தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்குவது பாராட்டுக்குரியது. செம்மொழிப்பூங்கா அமைக்கப்பட்டது. தாவரங்களை பாதுகாக்கும் மரபணுபூங்கா திட்டம், தஞ்சை ஆயிரமாவது விழா கொண்டாடப்பட்டது.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கும் திட்டம் உள்ளது. இதன் மூலம் விவசாய உற்பத்தி பெருகியிருக்கிறது.
புதிய சட்டசபை கட்டி பிரதமர் மன்மோகன்சிங் மூலம் திறந்து வைத்தது பெருமைப்பட வேண்டிய விஷயம் , சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இது போன்று தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி தொடர்ந்து பணியாற்றி வருகிறது இந்த அரசு. தமிழகத்தில் மின் உறபத்தி உயர்த்தப்பட்டுள்ளது. வட சென்னை, மேட்டூரில், தூத்துக்குடியில் அனல்மி்ன் திட்டம் நடந்து வருகிறது. இதன் மூலம் பல மெகா வாட் மின்சாரம் உற்பத்தி கிடைக்கும்.
மீனவர்கள் நலன், மாணவர்கள் நலன் பேணிக்காக்கப்படுகிறது. குடிசை வீடுகள் மாற்றி கலைஞர் வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் ரோடு பணிகள் நல்ல முறையில் நடந்துள்ளது.
மருத்துவக்கல்லூரிகளின் தரம் உயர்த்தப்பட்டு திறம் வாய்ந்த டாக்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். பட்டதாரிகள் இல்லாத குடும்பத்தில் ஒருவருக்கு கல்விச்செலவு அரசு மூலம் ஏற்கப்படும் திட்டம் பாராட்டுக்குரியது.
உயிர்காக்கும் உயர் சிகிச்சை அளிக்கும் கலைஞர்காப்பீட்டு திட்டம் நாட்டுக்கு வழிகாட்டும் புரட்சிகரமான திட்டம் ஆகும். இதில் 1.34 கோடி பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 754 பேர் பலன் அடைந்துள்ளனர்.
ஒரு ரூபாய் அரிசி வழங்கும் திட்டம் மூலம் உணவு பாதுகாப்பு பேணிக் காக்கப்படுகிறது. நியாய விலை கடைகளில் வழங்கும் இலவசம் மூலம ஏழை மக்கள் விலைவாசி உயர்வில் இருந்து காப்பாற்றப்படுகின்றனர்.
மாற்று திறனாளிகள் நலன் காக்கும் வகையில் பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான சலுகைள் குறித்து வழிகாட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கென ஒரு தனி துறை செயல்படுத்தப்பட்டு அதை நேரடியாக முதல்வர் கவனித்து வருவது பாராட்டுக்குரியதாகும்.
வளர்ந்து வரும் நகரங்களின் புறநகர் பகுதிகளின் வளர்ச்சி பணிக்கு 15 ஆயிரம் கோடி தேவைப்படும் என்றும் இதற்கு சர்வதேச வங்கி மூலம் நிதி பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
படித்து வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உதவி தொகை வழங்கியிருக்கிறது. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசுப்பணிகள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய ஊரக நல்வாழ்வு திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இறப்பு விகிதம் பேறுகால இறப்பு குறைந்திருக்கிறது என்று ஆளுநர் கூறினார்.
ஆளுநர் உரைக்குப் பின்னர், அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் ஆவுடையப்பன் வாசித்தார்.
அலுவல் ஆய்வுக் குழு கூடி சபையின் அலுவல்களை முடிவு செய்யும். ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும். பிப்ரவரி 4ம் தேதி சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. பிப்ரவரி 11ம் தேதி முன்பண மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படும்.
Leave a Reply