புதுடில்லி : உலகவங்கி தலைவர் ராபர்ட் பி. ஜோயல்லிக், நான்கு நாட்கள் அரசுமுறைப்பயணமாக இன்று இந்தியா வருகிறார். இதுகுறித்து, உலகவங்கி வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
இந்தியாவிற்கு அரசுமுறைப்பயணமாக வருகை தரும் ஜோயல்லிக், சர்வதேச நாடுகளிடையே இந்தியாவின் நல்லுறவு மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார். பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்திக்கும் ஜோயல்லிக், மற்ற உயர் அதிகாரிகளையும் சந்தி்க்கிறார். புதன்கிழமை பீகார் மாநிலத்திற்கு செல்லும் ஜோயல்லிக், கோசி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் தி்ட்டம் பற்றி உயர்அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார். வியாழக்கிழமை, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷை சந்திக்கும் ஜோயல்லிக், அன்றைய தினமே, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் சந்தித்துப் பேசுகிறார். வெள்ளிக்கிழமை, பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்திக்கும் ஜோயல்லிக், சாலை மேம்பாடு உள்ளிட்ட பல முக்கிய ஒப்பந்தங்கள் இந்த சந்திப்பில் கையெழுத்தாக உள்ளன. ராபர்ட் பி. ஜோயல்லிக், 2009ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குப் பிறகு தற்போது இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply