தாமிரபரணியை தவிர மற்ற குவாரிகளில் பொக்லைன் பயன்படுத்த கோர்ட் அனுமதி

posted in: கோர்ட் | 0

சென்னை : தாமிரபரணியைத் தவிர மற்ற குவாரிகளில், அதிகபட்சம் இரண்டு பொக்லைன்களை பயன்படுத்த சென்னை ஐகோர்ட் அனுமதித்துள்ளது.

தமிழகத்தில் ஆற்றுப் படுகைகளில் மணல் குவாரி நடப்பதை கண்காணிக்க ஒரு குழுவை அமைத்து, மதுரை ஐகோர்ட் கிளை கடந்த மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவில் மாற்றம் செய்யக் கோரி, நீதிபதிகள் பானுமதி, நாகமுத்து அடங்கிய “டிவிஷன் பெஞ்ச்’ முன், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் கோரினார். மேலும், இயந்திரங்களை பயன்படுத்தாமல், லாரிகளில் மணல் நிரப்புவது கடினமாக உள்ளது என்றும் முறையிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பானுமதி, நாகமுத்து அடங்கிய “டிவிஷன் பெஞ்ச்’ பிறப்பித்த இடைக்கால உத்தரவு: ஒவ்வொரு மணல் குவாரியிலும் அதிகபட்சம் இரண்டு பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்த, தொழில் துறை செயலர் அனுமதி வழங்கலாம். எத்தனை இயந்திரங்கள் பயன்படுத்துவது என்பதை குறிப்பிட்டு, எழுத்துப்பூர்வமாக சம்பந்தப்பட்ட அதிகாரி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை பொக்லைனை பயன்படுத்தக் கூடாது. வரும் 18ம் தேதி வரை இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும். தாமிரபரணி ஆற்றுப் படுகைக்கு இந்த உத்தரவு பொருந்தாது. இவ்வாறு “டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது. அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “சட்ட விரோதமாக மணல் குவாரி செய்வதை தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தாலுகா, மாவட்ட, மாநில அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது ஆய்வு செய்யப்படுகிறது. எனவே, கண்காணிப்புக் குழு தேவையில்லை.

காவிரி, கொள்ளிடம் ஆற்றுப் படுகையில் மணல் தேக்கம் அதிகம். மற்ற ஆறுகளுடன் இதை ஒப்பிட முடியாது. இயந்திரங்களை கவனமுடன் பயன்படுத்த, தொழில் துறை செயலருக்கு விதிகளில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விதியை பயன்படுத்துவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, கோர்ட்டுக்கு வந்திருந்தார். இரவு நேரங்களில் மணல் குவாரிகளில் பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என கோரினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *