சென்னை : “”இந்த ஆண்டுக்குள் இரண்டு லட்சம் விவசாய மோட்டார்களுக்கு கண்டிப்பாக மின் இணைப்புகள் வழங்கப்படும்,” என்று, மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி உறுதி அளித்தார்.
சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்: மகேந்திரன் – அ.தி.மு.க.,: உசிலம்பட்டி தொகுதி, வாலாந்தூர் கிராமத்தில், 110 கிலோவாட் திறனுள்ள துணை மின் நிலையம் அமைக்கப்படுமா?
அமைச்சர் வீராசாமி: அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டையன் – அ.தி.மு.க.,: டிரான்ஸ்பார்மர்களில் அளவுக்கு அதிகமாக மின் இணைப்புகள் தரப்படுகின்றன. இதனால், மோட்டார்கள் அடிக்கடி பழுதாகி விடுகின்றன. கூடுதல் மின் இணைப்புகளுக்கு ஏற்ப, புதிய டிரான்ஸ்பார்மர்கள் நிறுவப்படுமா?
அமைச்சர்: விவசாயிகள், மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரியாமல் நிர்ணயித்த திறனைவிட, கூடுதல் திறன்கொண்ட மோட்டார்களை பொருத்துகின்றனர். இதனால், இதுபோன்ற பிரச்னைகள் வருகின்றன. கூடுதல் டிரான்ஸ்பார்மர்கள் தேவைப்படும் இடங்கள் குறித்து தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பீட்டர் அல்போன்ஸ் – காங்.,: காற்றாலை மின் உற்பத்தி அதிபர்கள், அதிகமாக காற்று வீசும் காலத்தில் அதிகளவு மின் உற்பத்தி செய்கின்றனர். அப்படி உற்பத்தி செய்யும் மின்சாரத்தை, வெளியில் விற்பதற்கு அரசு அனுமதிப்பதில்லை. அதே நேரத்தில், கூடுதல் துணை மின் நிலையங்களை அவர்களே அமைத்துக் கொள்வதிலும் பிரச்னை இருப்பதாகக் கூறுகிறார்கள்.
அமைச்சர்: உண்மை தான். ஆனால், தற்போது அவர்களே துணை மின் நிலையங்களை அமைத்துக் கொள்ள அனுமதி வழங்குகிறோம். ஆனால், வெளியில் விற்பனை செய்வதற்கு அரசு அனுமதிக்கவில்லை. 2012ம் ஆண்டு மின்சாரம் உபரியாக இருக்கும். அந்த நேரத்தில், அவர்கள் வெளியில் மின்சாரத்தை விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்கும்.
ஜி.கே.மணி – பா.ம.க.,: இரண்டு லட்சம் விவசாய மோட்டார்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால், 25 சதவீதம் அளவிற்குக் கூட இணைப்புகள் வழங்காத நிலை இருக்கிறது. ஒரே சர்வே நிலத்தை, குடும்ப உறுப்பினர்கள் தனித்தனியாக பிரித்து விவசாயம் செய்தால், அவர்களின் கிணற்றில் உள்ள மோட்டாருக்கு மின் இணைப்பு மறுக்கப்படுகிறது. மின் இணைப்பு வழங்குவதில் உள்ள நடைமுறைகளை தளர்த்த வேண்டும். மேலும், மின் இணைப்பு பெறுவதற்கான காலக்கெடு முடிந்து விட்டது. இதை, மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்.
அமைச்சர்: இது குறித்து, முதல்வருடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இந்த ஆண்டுக்குள் இரண்டு லட்சம் விவசாய மோட்டார்களுக்கும் கண்டிப்பாக மின் இணைப்பு வழங்கப்படும். இணைப்பு பெறுவதற்கான காலக்கெடுவை நீட்டிப்பு செய்வது குறித்து, உரிய அறிவிப்பு விரைவில் வரும். இவ்வாறு விவாதம் நடந்தது.
Leave a Reply