சென்னை: 5வது சென்னை சங்கமம் கலை விழா பிரமாதமான இசை நாடகத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
சென்னை தீவுத் திடலில் நேற்று மாலை 5வது சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சி தொடங்கியது. முதல்வர் கருணாநிதி இதைத் தொடங்கி வைத்தார்.
கலை விழாவின் தலை விழாவாக பிரசன்னா ராமசாமியின் வானம்வசப்படும் என்ற இசை நாடக நிகழ்ச்சி நடந்தது. கெளரவக் கொலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாடகமாக இது அமைந்தது. அனைவரையும் கவரும் வகையிலான இந்த நாடகத்தில் இடம் பெற்ற வலுவான சமுதாயச் செய்தி அனைவரையும் நெகிழ வைத்தது.
ஒரு எளிய கதையை எடுத்துக் கொண்டு அதை இசை வடிவில் பிரமாதமாக அமைத்திருந்தனர். ஒரு கிராமத்து இளைஞன், வேலை தேடி நகரத்திற்கு வருகிறான். வந்த இடத்தில் காதல் மலர்கிறது. காதலியுடன் தனது ஊருக்குத் திரும்பிச் செல்கிறான். இருவரும் வேறு வேறு சாதியினர்.
இதனால் இளைஞனின் ஊரில் பிரளயம் ஏற்படுகிறது. ஊர்ப் பஞ்சாயத்துக் கூட்டி இந்தக் காதலைப் பிரிக்க உத்தரவிடப்படுகிறது. ஊரில் கலவரம் வெடிக்கிறது. இரண்டாக பிரிந்த கிராமம், சண்டையில் ஈடுபடுகிறது. யார் பெரியவர் என்ற இந்த மோதலால் அந்த இளைஞன் மற்றும் பெண்ணின் காதல் ஸ்தம்பித்துப் போகிறது. இறுதியில் நடப்பது மனதை உருக்குகிறது.
இந்த நாடகத்தின் தொடக்கத்தில் இரண்டு திருநங்கைகளின் அழகான நடனம் அனைவரையும் வியக்க வைப்பதாக இருந்தது. அதேபோல மாற்றுத் திறனாளி ஒருவரின் ஏரோபிக் நடனமும் அனைவரையும் கவர்ந்தது.
200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இந்த இசை நாடகத்தில் கலந்து கொண்டு நடித்து, நடனமாடினர். இசையும், கதையைச் சொல்லிய விதமும், நடனமும் இணைந்து கண் கவர் விருந்தாகவும், மனதுக்கு நல்ல செய்தியைத் தருவதாகவும் நாடகம் அமைந்திருந்நதது.
கிராமிய நடனங்கள், பாரதியாரின் பாடல்கள், தமிழ் சினிமாப் பாடல்கள் என வெரைட்டியான இசை வடிவங்களை இழையோட வைத்திருந்த விதம் அருமை. அதிலும் 3 பெண்கள் இணைந்து பாடிய அந்த ஒப்பாரிப் பாடல், கண்களை நனைக்கத் தவறவில்லை.
முத்து மாரியம்மன் வேடத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடனக் கலைஞர் அனிதா ரத்னம் பங்கேற்றார். வெறுமனே வேடிக்கை பார்த்து விட்டு போய் விடும் வகையிலான நாடகமாக இல்லாமல், சமூகத்திற்குத் தேவையான அருமையான செய்தியை சொன்ன இந்த நாடகத்தைப் பாராட்டதவர்களே கிடையாது.
Leave a Reply