மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட வேண்டும் என்று தொலைத் தொடர்பு மற்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசா கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்கை புதன்கிழமை சந்தித்து இது தொடர்பாக அவர் வேண்டுகோள் விடுத்தார்.
சாஃப்ட்வேர் தொழில்நுட்ப பூங்கா திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் நிறுவனங்களுக்கு ஏற்கெனவே வரிச் சலுகை அளிக்கப்பட்டிருந்தது. இந்த வரிச் சலுகை காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்துவிட்டது. இருப்பினும் சலுகை அடுத்த ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசா, பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து மேலும் 3 ஆண்டுகளுக்கு வரிச் சலுகையை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஐ.டி. நிறுவனங்களுக்கு வரிச் சலுகையை நீட்டிப்பதால் ஏற்படும் பலன்களை அவர் பிரதமரிடம் விளக்கியதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறப்புக் குழு: தகவல் தொழில்நுட்பத்துறையில் கொள்கைகளை உருவாக்கவும் வளர்ச்சி திட்டங்களை வடிவமைக்கவும் சிறப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று பிரதமரிடம் அமைச்சர் ராசா வலியுறுத்தினார். இந்தக் குழுவில் ஐ.டி. துறை நிபுணர்களையும் பிற முக்கிய துறையைச் சேர்ந்த நிபுணர்களையும் இடம் பெறச் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதன் மூலம் மேலும் அதிக அளவில் அன்னிய முதலீட்டை ஈர்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.
ஐ.டி. நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அளிப்பது குறித்து, பட்ஜெட் தயாரிப்பதற்கு முன் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்திக்க இருப்பதாக ஏற்கெனவே ராசா கூறியிருந்தார்.
சர்வதேச பொருளாதார மந்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ள ஐ.டி. நிறுவனங்களுக்கு இந்த வரிச் சலுகை பெரிதும் உதவியாக இருக்கும் என்பது அத்துறையைச் சேர்ந்தவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Leave a Reply