மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் பொதுமக்களை நோக்கி சரமாரியாகச் சுட்ட இரு நபர்களில் அஜ்மல் கசாபும் ஒருவர் என்று தீவிரவாதிகள் சுட்டதில் கால் ஊனமடைந்த தேவிகா ரொடாவன் (10) என்ற சிறுமி, நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.
மும்பை தாக்குதல் வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் சிறப்பு நீதிமன்றத்துக்கு புதன்கிழமை சாட்சியம் அளிக்க வந்த தேவிகாவிடம், “ரயில் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டவரை உன்னால் அடையாளம் காட்ட முடியுமா?’ என்று நீதிபதி கேட்டார்.
அதற்கு தன்னால் முடியும் என்று கூறிய தேவிகா, தன் முன்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று பேரில் அஜ்மல் கசாபை சுட்டிக்காட்டி, “இவர்தான் துப்பாக்கியால் சுட்டார்” என்றார்.
தேவிகா மேலும் நீதிமன்றத்தில் கூறியது:
சத்ரபதி சிவாஜி நீதிமன்றத்தில் நான், எனது தந்தை மற்றும் சகோதரர் நின்று கொண்டிருந்தோம். அப்போது இரு நபர்கள் பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். துப்பாக்கியால் சுடுவதைப் பார்த்ததும் எனது சகோதரர் மிரண்டு போய் ஒரு பக்கம் அலறியடித்துக் கொண்டு ஓடினார். எனது தந்தையோ என்னை அழைத்துக் கொண்டு மற்றொரு பக்கம் ஓடினார். அப்போது தீவிரவாதி ஒருவர் என்னை நோக்கிச் சுட்டார். இதில் துப்பாக்கிக் குண்டு என் காலை துளைத்தது. இதனால் காலில் ரத்தம் பீறிட்டது என்று தேவிகா தெரிவித்தார்.
நீதிமன்றத்துக்கு சாட்சியம் சொல்ல வந்த தேவிகா, ஊன்றுகோலின் உதவியுடன் மெதுவாக காலைத் தாங்கித் தாங்கி நடந்து வந்தார். இச்சம்பவம் பார்ப்பதற்கு உணர்ச்சிகரமாக இருந்தது.
Leave a Reply