சென்னை : அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுப்பதாக அளிக்கும் புகாரை விசாரிக்க, சேலம் போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்ட பா.ஜ., துணைத் தலைவரும், வக்கீலுமான மணிகண்டன் என்பவர் தாக்கல் செய்த மனுவை, நீதிபதி அக்பர்அலி விசாரித்தார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ஏற்கனவே மனுதாரர் அளித்த புகாரை போலீசார் பதிவு செய்துள்ளனர் என்றும், இரண்டாவதாக அளித்த புகாரையும் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கோருவதாக, கூடுதல் அரசு குற்றவியல் வக்கீல் அசன்முகமது ஜின்னா தெரிவித்தார். ரத்த அடையாளங்களுடன் மிரட்டல் கடிதம் வந்திருப்பதாக, மனுதாரரின் வக்கீல் தெரிவித்தார். சேலம் போலீஸ் கமிஷனரை மனுதாரர் அணுகி, அவரிடம் புகார் மற்றும் ஆவணங்களை அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்கும் பட்சத்தில், அதை கமிஷனர் விசாரிக்க வேண்டும். குற்றம் புரிந்ததற்கான முகாந்திரம் யார் மீது இருக்கிறதோ, அவர்களுக்கு எதிராக மட்டும் போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி அக்பர்அலி உத்தரவிட்டார்.
மணிகண்டனுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக, கூடுதல் அரசு குற்றவியல் வக்கீல் தெரிவித்ததைத் தொடர்ந்து, அது தொடர்பான மனுவை, நீதிபதி அக்பர்அலி பைசல் செய்தார். சேலம், சிறையில் இருந்த உறவினரை சந்திப்பதற்காக, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் காரில் வந்தார். சேலம் மாநகராட்சி மேயருக்காக வாங்கிய காரை, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பயன்படுத்தினார் என்றும், அந்த காரை பதிவு செய்யவில்லை என்றும், அதற்கு காப்பீடு இல்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அமைச்சர், மாநகராட்சி மேயர், கமிஷனர், ஆர்.டி.ஓ.,க்கு எதிராக, ஊர்வலத்தை மணிகண்டன் நடத்தினார். இதையடுத்து, அமைச்சரின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுப்பதாகவும், தனது புகாரை போலீசார் பதிவு செய்ய உத்தரவிடக் கோரியும், ஐகோர்ட்டில் மணிகண்டன் மனு தாக்கல் செய்தார். போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் கோரியிருந்தார்.
Leave a Reply