புதுடில்லி : அன்னிய நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்களின் ரகசிய கணக்கு விவரத்தை வெளியிடுவது தொடர்பாக மத்திய அரசு தனது நிலைப்பாட்டை இன்று வெளியிடும் என தெரிகிறது.
வெளிநாட்டு வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டுள்ள அந்தக் கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, முன்னாள் மத்திய அமைச்சரும், பிரபல வக்கீலுமான ராம்ஜெத் மலானி உட்பட பலர், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.இதுதொடர்பாக விசாரணை நடத்திய அமலாக்கத் துறையினர், சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கை கையெழுத்திடப்படாமல் தாக்கல் செய்யப்பட்டிருந்ததால், கடந்த நவம்பர் 30ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. அறிக்கையை சம்பந்தப்பட்ட துறையினருக்கு திருப்பி அனுப்பும்படி உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த வார இறுதியில், விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் சுதர்சன ரெட்டி மற்றும் எஸ்.எஸ்.நிஜார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,” அன்னிய நாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ள இந்தியர்களின் பெயர்களை வெளியிட மத்திய அரசு மறுப்பது ஏன்? அந்தத் தகவல்களை வெளியிடுவதில், அரசுக்கு என்ன பிரச்னை உள்ளது’ என்று கேள்வி எழுப்பினர்.இதற்கு பதில் அளித்த சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம், “வெளிநாடுகளில் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ள இந்தியர்கள் அனைவரின் பட்டியலையும் கோர்ட்டில் சமர்ப்பிக்கும் விவகாரத்தில், அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் செய்ய முடியும். அரசின் நிலை என்ன என்பதை கேட்டுத் தெரிவிக்கிறேன்,’ என்றார். இதையடுத்து விசாரணையை நீதிபதிகள் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இன்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வரும்போது, மத்திய அரசு இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சுவிஸ் வங்கிகளில் ரகசிய கணக்கில் பணம் போட்டுள்ள இந்தியர்கள் பற்றிய விவரங்களை, “விக்கிலீக்ஸ்’ வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. அதற்கு முன்னதாக இந்த தகவல்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என, பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்காரி கோரிக்கை வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது
Leave a Reply