அமெரிக்கா வந்துள்ள மஹிந்தவை கைது செய்யுமாறு சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை

posted in: உலகம் | 0

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அமெரிக்கா சென்றுள்ளார். இந்தநிலையில், யுத்த குற்றங்கள் தொடர்பில் அமெரிக்கா அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபை இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

அமெரிக்காவுக்கான அதிர்சி விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக, யுத்த குற்றங்கள் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பில் அமெரிக்க விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நேற்று காலை 20 பிரதிநிதிகளுடன் அமெரிக்கா சென்றார்.

இது தொடர்பிலான சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கையில், சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டுள்ளமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை அமெரிக்காவுக்கு இருப்பதாக, அதன் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சேம் சரிப் தெரிவித்துள்ளார்.

கடத்தல், துன்புறுத்தல், நீதிக்கு புறம்பான கொலைகள், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவே இலங்கையின் பாதுகாப்பு படையின் அதி உத்தம கட்டளைத் தளபதியாக உள்ள நிலையில், அவர் மீது யுத்த குற்றங்கள், கடத்தல், கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் நியமித்துள்ள நிபுணர்கள் குழு தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் நிலையில் ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் இடம்பெற்றுள்ளது.

யுத்த காலத்தில் விடுதலைப்புலிகள் தரப்பிலும், அரசாங்கத்தின் தரப்பிலும் யுத்தக் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன.

இந்த காலப்பகுதியில் இராணுவத்தினாலும், விடுதலைப்புலிகளினாலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டனர்.

இதற்கிடையில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான விக்கி லீக்ஸின் தகவல்படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும், அவரது சகோதர்களுமே இலங்கையின் பல குற்றச் செயல்களுக்கு காரணம் என அமெரிக்க துதுவர்கள் அமெரிக்க திணைக்களத்துக்கு தகவல் வழங்கியுள்ளமை உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில், யுத்த குற்றங்கள் தொடர்பில் ஜனாதிபதியை விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய பொறுப்பு அமெரிக்காவுக்கு இருப்பதாக மன்னிப்பு சபையின் பிராந்திய இயக்குனர் சாம் செரீப் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *