சென்னை: “பல்கலைக்கழக தேர்வுகளுக்கு பிறகு, ஏப்ரல் இறுதியில், ‘ஸ்லெட்’ தேர்வு நடத்தப்படும்,” என, கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சுவாமிநாதன் தெரிவித்தார்.
கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு, ‘நெட்’ அல்லது ‘ஸ்லெட்’ தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என யு.ஜி.சி., அறிவித்துள்ளது. தேசிய அளவிலான, ‘நெட்’ தேர்வு யு.ஜி.சி.,யால், ஒவ்வொரு ஆண்டு ஜூன் மற்றும் டிசம்பரில் நடத்தப்படுகிறது. மாநில அளவிலான, ‘ஸ்லெட்’ தேர்வு, மாநில பல்கலைக்கழகங்களால் அவ்வப்போது நடத்தப்படுகிறது.
தமிழகத்தில், 2008ம் ஆண்டு கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தால், ‘ஸ்லெட்’ தேர்வு நடத்தப்பட்டது. அதன்பிறகு தமிழகத்தில், ‘ஸ்லெட்’ தேர்வு நடத்தப்படவில்லை.
இதுகுறித்து, கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சுவாமிநாதனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
தமிழக அரசு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, ‘ஸ்லெட்’ தேர்வை நடத்த கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்காக ஒப்புதல் கோரி, தமிழக அரசிடமிருந்து யு.ஜி.சி.,க்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நாங்களும் தமிழக அரசின் அனுமதி கடிதத்தை வைத்து, யு.ஜி.சி.,யின் ஒப்புதலுக்கு விண்ணப்பித்துள்ளோம்.
‘ஸ்லெட்’ தேர்வு நடத்த அனுமதி வழங்குவதற்காக, யு.ஜி.சி., நிபுணர்கள் குழு, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தவுள்ளது. இம்மாத இறுதியில் யு.ஜி.சி. குழு, பாரதியார் பல்கலையில் ஆய்வு நடத்துகிறது. அதன்பிறகு, யு.ஜி.சி., ஒப்புதல் கிடைத்ததும், ‘ஸ்லெட்’ தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும். பல்கலைக்கழக தேர்வுகள் முடிந்த பின் ஏப்ரல் மாத இறுதியில், ‘ஸ்லெட்’ தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு சுவாமிநாதன் கூறினார்.
Leave a Reply