கொழும்பு:விடுதலைப் புலிகள் ஆதரவாளர் என கனடா நாட்டைச் சேர்ந்த எம்.பி., ஒருவரை, இலங்கை அரசு நேற்று திருப்பி அனுப்பியது.இலங்கையில், ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே 25 ஆண்டுகளாக நடந்து வந்த போர் முடிவுக்கு வந்ததாக கடந்த மாதம் 18ம் தேதி அந்நாட்டு அதிபர் அறிவித்தார்.
ஆனாலும், அந்நாட்டு அரசு, பல வெளிநாட்டு அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களை இலங்கைக்குள் நுழைய அனுமதிக்க மறுத்து வருகிறது.
இதற்கிடையில் பிரிட்டன் சரக்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களை, முறையான ஆவணங்கள் இல்லை எனக் காரணம் காட்டி திருப்பி அனுப்பியது. இந் நிலையில், இலங்கை வந்த கனடா நாட்டு எம்.பி., பாப் ரே என்பவரை விடுதலைப் புலிகள் ஆதரவாளர் எனக் கருதி, சர்வதேச விமான நிலையத்திலேயே, அந்நாட்டு அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.பாப் ரே, கனடாவின் டொரண்டோவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியைச் சேர்ந்த எம்.பி., இவர் முன்னர் அமைதி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள இலங்கை வந்திருந்தவரும் கூட.
இது குறித்து பாப் ரே வெளியிட்டுள்ள இ-மெயில் அறிக்கையில், “இலங்கை அரசு என்னைப் பற்றி தவறான கருத்துடன் உள்ளது. முந்தைய அமைதிப் பேச்சுவார்த்தையின் போது, விடுதலைப் புலிகளுக்கு எதிராக பேசியதற்கான ஆதாரங்கள் உள்ளன.
இலங்கை அரசு எனது கருத்தை புரிந்து கொண்டு தான் எனக்கு விசா வழங்கியது’ என்றிருக்கிறார்.இது குறித்து குடியேற்றத் துறை கட்டுப்பாட்டாளர் சி.பி.அபெய் கூன் கூறுகையில், “பாப் ரே பற்றிய புலனாய்வுத் துறையினரின் தகவல்கள் எங்களுக்கு கிடைத்தது.
மேலும், அவரை நாட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம் எனவும் எங்களுக்கு தகவல் வந்தது. எனவே அவரை இலங்கை சர்வதேச விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி, அடுத்த விமானத்திலேயே அவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்’ என்றார்.
Leave a Reply