தமிழ்நாட்டிலேயே வறண்ட மாவட்டமான ராமநாதபுரத்திற்கு குடிநீர் வழங்கும் 616 கோடி ரூபாய் மதிப்பிலான காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் நேற்று முதல் செயல்படத் துவங்கியது.
இந்த திட்டத்தின் மூலம், 15 லட்சத்து 75 ஆயிரத்து 682 பேர் குடிநீர் வசதியை பெற்றுள்ளனர். திருச்சி அருகே காவிரி ஆற்றில் இருந்து இந்த திட்டத்துக்காக தண்ணீர் எடுக்கப்பட்டு 198 கி.மீ., தூரத்திற்கு குழாய் வழியாக ராமேஸ்வரம் வரை கொண்டு வரப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க காவிரி ஆற்றினை நீராதாரமாக கொண்டு புதிய திட்டம் துவங்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 2007 ஜனவரி 30ல் பரமக்குடியில் அடிக்கல் நாட்டப்பட்டு 616 கோடி ரூபாய் செலவில் ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் துவங்கின.
தற்போது பணிகள் நிறைவடைந்து 150 ஆண்டுகால ராமநாதபுரத்தின் குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்துள்ளது.
ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்ட துவக்க விழா, ராமநாதபுரம் போலீஸ் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. சென்னையில் இருந்து ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம், முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார். ராமநாதபுரத்தில் நடந்த விழாவில் பங்கேற்ற துணை முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ”ராமநாதபுரம் கூட்டுக் குடிநீரானது, ராமேஸ்வரத்தில் உள்ள 23 புனித தீர்த்தங்களுடன் ஒப்பிடும்போது, 24வது தீர்த்தமாக அமையும்,” என்றார்.
இத் திட்டத்தால் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் 18 ஒன்றியங்களை சேர்ந்த 3,163 ஊரக குடியிருப்புகள் என 15 லட்சத்து 75 ஆயிரத்து 682 பேர் பயன்பெறுகின்றனர். வரும் 2036ம் ஆண்டு உச்சகட்ட மக்கள் தொகையான 20 லட்சம் நபருக்கு தேவையான 10 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்க வசதியாக திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூரில் மூன்று, கடியாகுறிச்சியில் ஒன்று என நீர் சேகரிப்பு கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. 119 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளுக்கு நீர் கொண்டு செல்லப்பட்டு புதிதாக அமைக்கப்பட உள்ள 601 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் 198 கி.மீ., நீளமுள்ள பகிர்மான குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்படும்.
தற்போது தினசரி தேவையான ஐந்து கோடி லிட்டர் நீர் எடுத்து மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. கிணற்றில் இருந்து பெறப்படும் நீர் தலைமை பணியிடத்தில் இருந்து 20 லட்சம் லிட்டர் மற்றும் ஐந்து லட்சம் லிட்டர் தரைமட்ட நீர் சேகரிப்பு தொட்டிகளில் சேகரிக்கப்படும். அங்கிருந்து நீர் ஏற்றும் குழாய்கள் மூலம் வினியோகிக்கப்படும்.
முதற்கட்டமாக ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, கீழக்கரை ஆகிய நகராட்சிகளுக்கும், மண்டபம், சாயல்குடி, முதுகுளத்தூர், கமுதி, அபிராமம் ஆகிய பேரூராட்சிகளுக்கும் நேற்று முதல் குடிநீர் வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக 30 நாட்களுக்குள் மற்ற பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளது.
Leave a Reply