சென்னை : “தனியார் பள்ளிகளில் முதல் வகுப்பு வரை சேரும் குழந்தைகளுக்கு, எக்காரணம் கொண்டும் தேர்வு முறையையோ, வாய்வழி கேள்வி கேட்கும் முறையையோ கண்டிப்பாக கடைபிடிக்கக் கூடாது.
மேலும், மாணவர் சேர்க்கையின் போது, பெற்றோர் கல்வித் தகுதியை கருத்தில் கொள்ளக் கூடாது. ஒவ்வொரு பள்ளியும், 25 சதவீத இடங்களை அருகில் உள்ள குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும்’ என, பல்வேறு அதிரடி உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், மத்திய அரசு கொண்டு வந்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றி, தமிழகத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய அம்சங்கள் குறித்து, தமிழக அரசு வெளியிட்ட அரசாணை:மத்திய அரசு, கடந்த 2009ம் ஆண்டு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது. 6 முதல் 14 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், தரமான இலவச தொடக்கக் கல்வி வழங்குவதே, சட்டத்தின் முக்கிய நோக்கம். இச்சட்டத்தின் கீழ், மாநில அரசுகள் தகுந்த விதிகளை உருவாக்க, மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது.
ஒரு பள்ளி, முதல் வகுப்பிலோ அல்லது அதற்கு முந்தைய கல்வியிலோ (பிரீ கே.ஜி., முதல் யு.கே.ஜி., வரை) மாணவர் சேர்க்கையை நடத்தும்போது, மொத்தமுள்ள இடங்களில் 25 சதவீத இடங்களை, அருகில் உள்ள நலிந்த பிரிவுகள் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, “அட்மிஷன்’ வழங்க வேண்டும் என்றும், அப்படி சேர்க்கும்போது, அவர்களுக்கு எந்தவிதமான தேர்வுகளையோ அல்லது வாய்வழி கேள்விகளை கேட்பதோ கூடாது என்றும் மத்திய அரசு சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள 75 சதவீத இடங்களை பூர்த்தி செய்யும்போது, ஒவ்வொரு பள்ளியும், சேர்க்கைக்கான சரியான அடிப்படை கோட்பாடுகளுடன் கூடிய வரையறுக்கப்பட்ட கொள்கையை பின்பற்ற வேண்டும் என்றும், எந்த ஒரு நிலையிலும் குழந்தையினுடைய இதர தகுதிகளையோ அல்லது பெற்றோர் கல்வித் தகுதிகளையோ கருத்தில் கொள்ளக் கூடாது என்றும் அச்சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
75 சதவீத பிரிவின் கீழ் சேர்க்கப்படும் குழந்தைகளிடமும் தேர்வுகள் நடத்தக் கூடாது. சேர்க்கைக்கான கொள்கையை, பொது மக்களுக்கு பள்ளிகள் தெரியப்படுத்த வேண்டும் என்றும், மத்திய அரசு கூறியுள்ளது.இந்த விதிமுறைகளை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் அமல்படுத்துவதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த விதிமுறைகளை பள்ளி நிர்வாகங்கள் கடைபிடிக்கின்றனவா என்பதை உறுதி செய்யும் அதிகாரம், சம்பந்தப்பட்ட ஆய்வு அலுவலர்களுக்கும், இயக்குனர்களுக்கும் வழங்கி, தமிழக அரசு உத்தரவிடுகிறது.இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கையில் கடைபிடிக்க வேண்டிய பல்வேறு கிடுக்கிப்பிடி உத்தரவுகளை அரசு பிறப்பித்திருக்கிறது. இதை, அனைத்துப் பள்ளிகளும் வரும் கல்வியாண்டில் 100 சதவீதம் கடைபிடிக்கும் வகையில், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
Leave a Reply