பாகிஸ்தானில் தாலிபான்கள் செய்துவரும் கொடுமைகளுக்கு இந்த விடியோவும் சாட்சி. இஸ்லாமிய மதக்கோட்பாடுகளைக் கடைபிடிக்கிறோம் என்கிற பெயரில் பெண்களுக்கு எதிராக அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளில் கொஞ்சமும் மனிதாபிமானம் இருப்பதில்லை.
இந்த விடியோவில் இரண்டு ஆண்கள் தரையில் அமுக்கிப் பிடித்துக்கொள்ள, கசையடி வாங்குபவர் ஒரு பெண்.
அந்த பதினேழு வயது பெண் செய்ததாகக் கூறப்படும் குற்றம், கணவன் அல்லாத வேற்று ஆணோடு வீட்டில் இருந்து வெளிப்பட்டது எனக் கூறப்படுகிறது. அவர்கள் உண்மைணில் உறவு வைத்துக்கொண்டார்களா என்பதற்கும் ஆதாரம் இல்லை. பாகிஸ்தானில் தாலிபான்களின் ஆதிக்கத்தின்கீழ் இருக்கும் ஸ்வாட் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
மின்னலா என்ற அந்தப் பெண், ‘அடிப்பதை நிறுத்துங்கள் அல்லது என்னைக் கொன்று விடுங்கள்’ என்று கதறியும் அவர்கள் விடவில்லை. தண்டனை என்கிற பெயரில் 34 கசையடிகளை அவள் உடலில் ஏற்றிவிட்டுத்தான் விட்டார்கள்.
அதுமட்டுமல்ல தாங்கள் கொடுத்த தண்டனையை நியாயப்படுத்துவது போல, தண்டனை தரப்படுவதை மொபைல் கேமிராவில் பதிவு செய்திருக்கிறார்கள் (இதில் மட்டும் புதுமை தேவையாக்கும்?). இஸ்லாமியப் பெண்கள் அனைவரும் இந்த விடியோவை பார்க்கவேண்டும், தவறு செய்தால் இதுதான் தண்டனை என்று உணரவேண்டும் என்கிறார்கள் தாலிபான்கள்.
இதில் இன்னும் பெரிய கொடுமை என்னவென்றால், அந்த இளம்பெண்ணை அமுக்கிப் பிடித்திருக்கும் இருவரில் அவளுடைய அண்ணனும் ஒருவன்.
தங்கைக்கு தண்டனை வாங்கி கொடுத்ததில் அவனுக்கு அத்தனை பெருமை. தன்னுடைய மதக் கலாசாரத்தைக் காப்பாற்றிவிட்ட கதாநாயகன் அந்தஸ்தும் அவனுக்குக் கிடைத்திருக்கிறது.
அந்த ஆணுக்கு தண்டனை கொடுத்தார்களா இல்லையா என்பது தெரியவில்லை.
Leave a Reply