மத்திய பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்ட படிப்புகளில் சேர, பொது நுழைவுத்தேர்வு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மொத்தம் 42 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன. எனவே அக்கல்வி நிறுவனங்களில் முதுநிலை, எம்.பில். மற்றும் பிஎச்.டி. போன்ற படிப்புகளில் சேர்வதற்கு, நாடு முழுவதற்கும் ஒரே பொது நுழைவுத்தேர்வு நடத்த, அப்பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் அடங்கிய கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. இந்த செயல்முறை வெற்றிகரமாக அமைந்தால், இளநிலை படிப்புகளுக்கும் பொது நுழைவுத்தேர்வு அமல்படுத்தப்படும் என்று கமிட்டி வட்டாரங்கள் தெரிவித்தன.
முதுநிலை படிப்பிற்கான பொது நுழைவுத்தேர்வானது, இளநிலை பாட தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இருக்கும். இளநிலை படிப்பில் முதல் 2 வருடங்களுக்கு, ஒரு மாணவரின் செயல்திறன் மதிப்பிடப்படும். நுழைவுத்தேர்வுக்கு 70% மதிப்பெண்களும், இளநிலை படிப்பின்போதான செயல்பாட்டிற்கு 30% மதிப்பெண்களும் வழங்கப்படும்.
மத்திய பல்கலைகளுக்கான பொது நுழைவுத்தேர்வானது மாணவர்களின் பாடம் சம்பந்தமான ஆர்வம் மற்றும் பாடத்தில் இருக்கும் அறிவு ஆகிய 2 அம்சங்களைக் கொண்டிருக்கும். இந்த 2 நிலைகளுக்குமான மதிப்பெண்கள் கமிட்டியின் பரிந்துரைப்படி முறையே 40:60 என்றிருக்கும்.மேலும் எம்.பில். மற்றும் பிஎச்.டி. படிப்புகளுக்கு நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்வானது, யு.ஜி.சி. அமைப்பால் நடத்தப்படும் ஜே.ஆர்.எப். தேர்வை ஒத்ததாக இருக்கும்.
இதுமட்டுமின்றி, எம்.பில். மற்றும் பிஎச்.டி. படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு மத்திய பல்கலைக்கழகங்களே சுயமாக நேர்முகத்தேர்வு வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவதோடு, அந்த நேர்முகத்தேர்வுகளில் மதிப்பெண்களை வழங்குவதற்கான சுயாட்சி உரிமையும் வழங்கப்படும்.
மத்திய மனிதவள அமைச்சர் கபில் சிபலால் கடந்த வருடம் இந்த கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி வழங்கியுள்ள இதுபோன்ற பரிந்துரைகளுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply