பன்றிக்காய்ச்சல் உலகையே அச்சுறுத்தி வருகிறது. வைரஸ் கிருமிகளால் இந்நோய் பரவுகிறது. முதன்முதலில் இது கனடாவில் உருவானது.
அங்கிருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வழியாக இந்தியா உள்ளிட்ட 74 நாடுகளில் ஊடுருவி பரவியுள்ளது. உலகம் முழுவதும் 30 ஆயிரம் பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 141 பேர் பலியாகி உள்ளனர்.
இது பரவாமல் தடுக்க உலக நாடுகள் முழுவதும் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளன. விமான நிலையங்களில் டாக்டர்கள் குழு அமைத்து வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட் டுள்ளனரா எனப் பரிசோதிக்கப்படுகின்றனர். இருந்தும் பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு ஜெனீவாவில் கூட்டம் நடத்தியது.
இந்த நோயின் தன்மை மற்றும் பாதிக்கப்பட்ட நபர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. முடிவில் பன்றிக்காய்ச்சல் ஒரு பயங்கர தொற்று நோய் என அறிவிக்கப்பட்டது.
கடந்த 1968ஆம் ஆண்டு எச்3 என்.ஐ. என்ற வைரஸ் கிருமிகளால் ஒருவித விஷக்காய்ச்சல் பரவியது. இதில் உலகம் முழுவதும் 10 லட்சம் பேர் இறந்தனர்.
அப்போது உலகை அச்சுறுத்திய அந்த விஷக்காய்ச்சல் பயங்கரமான தொற்று நோய் என உலக சுகாதார மையம் அறிவித்தது. தற்போது 41 ஆண்டுகளுக்கு பிறகு பன்றிக்காய்ச்சல் இது போன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கும் படி தனது அமைப்பில் உள்ள 194 நாடுகளையும் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
பள்ளி, கல்லூரிகளை மூடுதல், வெளிநாட்டுப் பயணத்தைத் தவிர்த்தல் போன்ற நடவடிக்கையில் ஈடுபடும் படியும், அறிவுறுத்தப்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சலை உருவாக்கும் ‘வைரஸ்’கள் பரவியுள்ளனவா என அனைத்து நாடுகளும் சோதனையிடும் படியும் கோரப்பட்டுள்ளது.
இந்தியாவில் 15 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் டில்லியைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்ட அனைவரும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இருந்து இந்தியா திரும்பியவர்கள்.
ஹொங்காங் மற்றும் ஆஸ்திரேலியாவில் பன்றிக் காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. ஆஸ்திரேலியாவில் கடந்த திங்கட்கிழமை இந்த நோயினால் 1000 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து 2 நாளில் அதாவது புதன்கிழமை நோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1260 ஆக உயர்ந்துள்ளது.
ஹொங்காங்கில் பள்ளிச் சிறார்களிடம் நடத்திய பரிசோதனையில் 12 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. எனவே, சிறுவர்கள் கல்வி பயிலும் நிலையங்களுக்கு அரசு 2 வாரங்கள் விடுமுறை அறிவித்துள்ளது.
Leave a Reply