கறுப்பு பணம் தொடர்பாக மத்திய மந்திரி பிரணாப்முகர்ஜியின் அறிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. கறுப்பு பண முதலைகளை காப்பாற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக அக்கட்சி துணைப் பொதுச் செயலாளர் சுரவர்ணம் சுதாகர் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் இந்தியாவின் கறுப்பு பணம் பற்றிய விவரத்தையும், அதனை இந்தியர்கள் யார்- யார்? போட்டு வைத்து இருக்கிறார்கள் என்ற ரகசியத்தை வெளியிட முடியாது என மத்திய நிதி மந்திரி பிரணாப்முகர்ஜி திட்டவட்டமாக அறிவித்து உள்ளார்.
அவரது இந்த அறிக்கை வியப்பூட்டுவதாக உள்ளது. இதன் மூலம் மத்திய அரசு வெளிநாடுகளில் பணம் பதுக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலை வெளியிட நடவடிக்கை எடுக்காது என்பது தெளிவாகிறது. பட்டியல் வெளியிட முடியாது என்பதற்கான தொழில் நுட்ப காரணத்தை கண்டு பிடிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது தெளிவாகிறது.
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் நமது நாட்டின் பணத்தை திருப்பி கொண்டு வருவதில் மத்திய அரசுக்கு அக்கறையும் இல்லை, தைரியமும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. அரசியல் காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது.
பிரணாப் முகர்ஜியின் அறிக்கை வெளியானதால் சுவிட்சர்லாந்து வங்கிகளில் பதுக்கி வைத்து இருக்கும் கறுப்பு பணத்தை இந்தியர்கள் அந்த வங்கிகளில் இருந்து எடுத்து வளைகுடா நாடுகளுக்கு கொண்டு செல்லும் நிலைக்கு வழிவகுத்து உள்ளது. வெளிநாடுகளில் உள்ள இந்தியாவின் கறுப்பு பணம் எவ்வளவு என்பது பற்றி மந்திரி பிரணாப் முகர்ஜி கணக்கெடுத்து உள்ளார்.
அந்த பணத்தை முடக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு, சட்ட விரோதமாக வெளிநாட்டு வங்கிகளில் பணம் போட்டுள்ளவர்களின் பெயர் விவரங்களை அரசு வெளியிட வேண்டும். கறுப்பு பணத்தை நாட்டுக்கு கொண்டு வர சர்வதேச நாடுகளின் உதவியை பெற்று, வெளிநாட்டு வங்கிகளில் முறை கேடாக போடப்பட்டுள்ள அந்த நாடுகளுடன் ஆலோசனை நடத்தி அந்த பணத்தை மீட்க வேண்டும்.
அந்த பணத்தை நாட்டு மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். ஆனால் மத்திய அரசு வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை போட்டு இருப்பவர்களின் பட்டியலை பாதுகாக்க முயன்று வருகிறது தெளிவாகிறது. முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் ஆகியோரை காக்கவே அரசு முயற்சிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply