ஸ்ரீவில்லிபுத்தூர்:””தி.மு.க., அரசு செய்யும் தவறுகளுக்கு, மத்திய அரசு பாதுகாவலனாக உள்ளது,” என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் அவர் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை தோற்கடிக்க அனைத்து முயற்சிகளையும் புதிய தமிழகம் செய்து வருகிறது. பிப்.7 முதல், கிராமம் தோறும் பிரசாரம் செய்ய உள்ளேன்.
தி.மு.க.,வினர் கடந்த தேர்தலில் வாக்குறுதி கொடுத்த இரண்டு ஏக்கர் விவசாய நிலம், மூன்று சென்ட் இலவச வீட்டுமனை போன்ற திட்டங்கள் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. ஆனால் தற்போதும் புதிது புதிதாக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என கனவு காண்கின்றனர். ஸ்பெக்ட்ரம் ஊழலை விசாரிக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து தடைகளை ஏற்படுத்தி வருகின்றன. எதிர்கட்சிகள் லோக்சபா கூட்டுக்குழு விசாரணை கேட்டும் மத்தியரசு அதை மறுத்து வருகிறது. இதனால் ஊழலுக்கு துணை புரியும் காங்.,கட்சியும் வரும்தேர்தலில் தோல்வியை சந்திக்கும்.
தி.மு.க, அரசு செய்யும் தவறுகளுக்கு மத்திய அரசு பாதுகாவலனாக இருந்து வருகிறது. தேவேந்திர குல வேளாளர்களை ஒருங்கிணைக்க ஒரு நபர் கமிஷன் அமைத்திருப்பது தேவையற்ற செயல். ஐந்தாண்டுகள் ஆட்சி நடத்தியும் விவசாயிகளை காப்பாற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் விளைநிலங்கள் ரியல் எஸ்டேட்டாக மாறி வருகிறது, என்றார்.
Leave a Reply