தொலைத் தொடர்பு கொள்கையில் மாற்றம்: செல்போன் கட்டணங்கள் உயருகின்றன!

posted in: மற்றவை | 0

டெல்லி: தொலைத் தொடர்பு கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் செல்போன் கட்டணங்கள் மீண்டும் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் தொலை தொடர்பு புரட்சியை ஏற்படுத்துவதற்காக செல்போன் சேவை தொடங்குவதற்கான லைசென்சும், 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடும் ஒன்றாக இணைத்து வழங்கப்பட்டு வந்தன.

இதற்கு மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்பட்டு வந்தது. 2001-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே 2008-ம் ஆண்டிலும் ஸ்பெக்ட்ரம் விற்பனை செய்யப்பட்டது. இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக தலைமை கணக்கு தணிக்கையாளர் குற்றம் சாட்டினார்.

இதனால் பெரும் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து தொலை தொடர்பு கொள்கையில் மாற்றம் செய்து புதிய அறிவிப்பினை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் கபில்சிபல் வெளியிட்டார்.

செல்போன் சேவை வழங்குவதற்கான லைசென்சும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடும் இனி தனித்தனியாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “1999-ம் ஆண்டில் புதிய தொலை தொடர்பு கொள்கை அறிமுகம் செய்யப்பட்டது. டெலிபோன் சேவையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட அக்கொள்கையில் தொலை தொடர்பு லைசென்சும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடும் சேர்த்து வழங்கவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது தொலைத்தொடர்பு துறையில் போட்டி அதிகரித்து விட்டதால் புதிய கொள்கைக்கு மாற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

எனவே இனி லைசென்சும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடும் ஒன்றாக வழங்கப்பட மாட்டாது, உரிமம் பெற்றவர்கள் எந்த விதமான தொலைபேசி சேவையை வேண்டுமானாலும் தொடங்கி கொள்ளலாம். அதற்கு தேவையான ஸ்பெக்ட்ரத்தை சந்தை விலை கொடுத்து வாங்க வேண்டும். இந்த புதிய கொள்கை உடனடியாக நடைமுறைக்கு வருகிறது…” என்றார்.

புதிய தொலை தொடர்பு கொள்கை காரணமாக ஏர்டெல், ஏர்செல், வோடாபோன் ஆகிய நிறுவனங்கள் ஸ்பெக்ட்ரம் உரிமத்தை கூடுதல் விலைக்கு வாங்க வேண்டும்.

மேலும் லைசென்ஸ் வழங்கும்போது தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஏலம் அல்லது எந்த வழிமுறையை பரிந்துரைக்கிறதோ அந்த வழி முறை கடைபிடிக்கப்படும். இந்த புதிய கொள்கையால் செல்போன் கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளது.

இதுகுறித்து கேட்டபோது, “மொபைல் போர்ட்டபிலிட்டி வசதி இருப்பதால், அவ்வளவு சீக்கிரம் கட்டணம் உயராது” என்றார் கபில் சிபல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *