டெல்லி: எகிப்தில் அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாலும், தலைநகர் கெய்ரோ தொடர்ந்து பதட்டமாக இருப்பதாலும் அங்கு வசிக்கும் இந்தியர்களில் 300 பேர் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவர்களுக்காக சிறப்பு விமானம் ஒன்றை ஏர் இந்தியா நிறுவனம் அனுப்பியுள்ளது.
இந்த விமானம் கெய்ரோவுக்கு நேற்று மாலை புறப்பட்டுச் சென்றது. இதில் 300 இந்தியர்களும் அழைத்து வரப்படுவர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
இந்தியாவுக்குத் திரும்ப விரும்புவோர் தங்களது விருப்பத்தைத் தெரிவிக்கலாம் என்று ஏற்கனவே கெய்ரோவில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்திருந்தது. இதையடுத்து தற்போது இந்தியர்கள் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து சிறப்பு ஏற்பாடுகளை இந்தியத் தூதரகம் முடுக்கி விட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்தியத் தூதர் ஆர்.சுவாமிநாதன் மேற்பார்வையிட்டு வருகிறார்.
Read: In English
இதற்கிடையே, நேற்று கெய்ரோவில் விமானப் போக்குவரத்து திடீரென ரத்து செய்யப்பட்டதாலும், தலைநகரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதாலும், விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான இந்திய பயணிகள் தவிப்புக்குள்ளாகினர்.
எகிப்தில் 3600 இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் 2000 பேர் வரை கெய்ரோவில் வசிக்கின்றனர். அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
Leave a Reply