டெல்லி: கூட்டணியில் சேர்க்குமாறு பாமக தலைவர்கள் கெஞ்சிக் கொண்டிருந்த நிலையில், பாமகவும் கூட்டணியில் இருக்கிறது என்று டெல்லியில் அறிவித்த முதல்வர் கருணாநிதியின் பேச்சை மறுக்கும் வகையில், அது அவரது சொந்த விருப்பம், நாங்கள் முடிவெடுக்கவில்லை என்று கூறிய டாக்டர் ராமதாஸுக்குப் பதிலடியாக,நாங்களும் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறி விட்டார் முதல்வர் கருணாநிதி.
டெல்லி வந்துள்ள முதல்வர் கருணாநிதியிடம், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது காங்கிரஸுக்கு அடுத்த பெயராக பாமகவின் பெயரைச் சொன்னார். இதனால் பாமக வட்டாரம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது. ஆனால் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸோ, முதல்வர் தனது விருப்பத்தை சொல்லியுள்ளார். ஆனால் நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறி திமுக வட்டாரத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இவர்கள்தானே கூட்டணியில் சேர்க்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் டாக்டர் இப்படிக் கூறுகிறாரே என்று ஆச்சரிய அலைகள் பரவின. அதேசமயம், வேறு சில தூதர்களும் எங்களுடன் பேசி வருகின்றனர் என்று ராமதாஸ் பொடி வைத்துப் பேசியதால், அதிமுக தரப்பிலிருந்து தொடர்ந்து நூல் விட்டு வருவது மறைமுகமாக தெரிய வந்தது.
காரணம், அந்தப் பக்கம் விஜயகாந்த் தேவையே இல்லாமல் ஏக பந்தா செய்து வருகிறார். தனக்குள்ள வாக்கு வங்கியை வைத்து அவர் நடத்தி வரும் பேரத்தால், அதிமுக மலைத்துப் போய் நிற்கிறது. ஒரு வேளை விஜயகாந்த் வருவதில் இழுபறி ஏற்பட்டால் பாமகவை வளைத்துப் போட்டு விட திட்டமிட்டுள்ளார் ஜெயலலிதா. இதனால்தான் ராமதாஸ் இப்படிக் கூறுகிறாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் ராமதாஸுக்கு ‘நாக் அவுட்’ பதிலைச் சொல்லியுள்ளார் முதல்வர் கருணாநிதி.
நேற்று டெல்லியில் மீண்டும் செய்தியாளர்கள் கருணாநிதியை சந்தித்தபோது ராமதாஸ் கூறியிருப்பது குறித்து கேட்டபோது, பாமக முடிவு செய்யவில்லை என்றாலும் நாங்களும் கூட அதுகுறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றார் கருணாநிதி.
தேடித் தேடிப் போய் முறையிட்டும் கிடைக்காத வாய்ப்பு, தானாக தேடி வந்தபோது எட்டி உதைக்கும் வகையில் ராமதாஸ் பேசியிருப்பதாக திமுக வட்டாரம் கருதுகிறது. அதேசமயம், திமுக தர முன்வந்துள்ள தொகுதிகள் எண்ணிக்கையில் பாமகவுக்கு அதிருப்தி ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே பேரத்தை நீட்டிக்கும் வகையிலேயே ராமதாஸ் பேச்சு அமைந்திருப்பதாகவும் கருதப்படுகிறது.
பாமகவின் திட்டம் என்ன, திமுக அணிக்கு மீண்டும் வருமா அல்லது அதிமுக அணியில் இணையுமா என்பது விரைவில் தெரிய வரலாம்.
Leave a Reply