டெல்லி: முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவிடம் நேற்று சிபிஐ 3வது முறையாக விசாரணை நடத்தியது. இந்த விசாரணை 9 மணி நேரம் நடந்ததாக சிபிஐ செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் ராசாவை பல மணி நேரம் விசாரித்தது சிபிஐ. இந்த நிலையில் நேற்று 3வது முறையாக ராசாவை சிபிஐ தலைமையகத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணை 9 மணி நேரம் நீடித்ததாக சிபிஐ தெரிவித்துள்ளது.
நேற்றைய விசாரணையின்போது சில குறிப்பிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து ராசாவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அந்த நிறுவனங்களின் கிளை நிறுவனங்களில் ராசா குடும்பத்தினருக்கு உள்ள தொடர்புகள் குறித்து கேட்கப்பட்டது.
நீரா ராடியாவுடன் தொலைபேசியில் நடத்திய உரையாடல் குறித்தும் கேட்கப்பட்டது. மீண்டும் ராசாவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாக சிபிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றுதான் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் கபில் சிபலிடம், நீதிபதி சிவராஜ் பாட்டீல் தனது அறிக்கையை சமர்ப்பித்தார். அதில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக ராசா மற்றும் பத்து அதிகாரிகள் தவறு இழைத்துள்ளனர். இதனால்தான் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக பாட்டீல் தெரிவித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது நினைவிருக்கலாம். இந்தச் சூழ்நிலையில் ராசாவிடம் நடத்தப்பட்ட விசாரணை முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராசா கடுமையான நெருக்குதலுக்கு ஆளாகி தனது தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் பதவியை இழந்தார் என்பது நினைவிருக்கலாம்.
ராசாவின் நடவடிக்கைகளால் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. இதன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் சிபிஐயை பலமுறை கடுமையாக கண்டித்த பின்னர், மிக மிக லேட்டாக களத்தில் இறங்கிய சிபிஐ ராசா உள்ளிட்டோரின் வீடுகளில் ரெய்டு நடத்தி வழக்குப் பதிவு செய்தது. அதன் பின்னர் நேற்றுடன் சேர்த்து ராசாவிடம் 3 முறை விசாரணை நடத்தியுள்ளது.
Leave a Reply