அரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக நீட்டிப்பு? தேர்தல் பரிசாக அறிவிப்பு

posted in: மற்றவை | 0

தமிழகத்தில், அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை, 58ல் இருந்து, 60ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை, அரசு மேற்கொண்டுள்ளது.

தேர்தல் பரிசாக வரும் சட்டசபை கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில், அரசுத்துறையில் அதிகாரிகள் முதல், கடைநிலை ஊழியர் வரை, 12 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். ஆசிரியர், வாரியம், சத்துணவு, அங்கன்வாடி என, எட்டு லட்சம் பேர் வரை பணியாற்றுகின்றனர்.மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது, 60 ஆக உள்ளது. ஆனால், தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது, 58 ஆக உள்ளது. அலுவலக உதவியாளர், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், நீதிபதி போன்றோருக்கு ஓய்வு பெறும் வயது, 60ஆக உள்ளது.இன்னும் ஓராண்டில், தமிழக அரசுத்துறைகளில், பணியாற்றும் இரண்டு லட்சம் பேர் ஓய்வு பெற உள்ளனர். சட்டசபை தேர்தல் நெருங்குவதால், அரசு பணிகளில் உள்ளோருக்கு, தி.மு.க., அரசு பல்வேறு சலுகை, ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது.

“மத்திய அரசு போல், மாநில அரசில் பணியாற்றுவோரின் ஓய்வு வயதை உயர்த்த வேண்டும்’ என, பல்வேறு சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.அரசு பரிசீலனையில் இத்திட்டம் உள்ளது. வரும், 4ம் தேதி இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்குகிறது. 5ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கலாகிறது. இந்த அரசின் கடைசி பட்ஜெட் தொடர் என்பதால், ஏராளமான சலுகைகளை எதிர்பார்க்க முடியும்.தேர்தல் பரிசாக , அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை, 60 ஆக, நீட்டிப்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என, அரசு துறை வட்டாரங்கள் உறுதியாக கூறுகின்றன.

இது குறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஏற்கனவே, ஓய்வு வயதை, மத்திய அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல, 60 ஆக நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். அரசும் அந்த திட்டத்தை கையில் எடுத்தது; பின் நிறுத்தி விட்டது.இந்த ஆண்டில் இரண்டு லட்சம் பேர் ஓய்வு பெற உள்ளனர். அவர்களது ஓட்டு வங்கியை கைப்பற்ற தற்போதைய கூட்டத்தொடரில், இத்திட்டத்தை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு ஓய்வுக்காலத்தை நீட்டித்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *