சென்னை : “”எகிப்தில் கலவரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மக்கள் கையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் தெருக்களில் நடமாடி வருகின்றனர்.
இதனால் பயந்து போன நாங்கள், நான்கு நாட்களாக சாப்பாடு இல்லாமல், வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்தோம்,” என, எகிப்தில் இருந்து சென்னை திரும்பியவர்கள் கூறியுள்ளனர்.
எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கை எதிர்த்து மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் கெய்ரோ, சூயஸ், அலக்சாண்டிரியா, மன்சூரா உள்ளிட்ட நகரங்களில் வன்முறை அதிகமாக உள்ளது. எகிப்தில் சிக்கிக் கொண்ட இந்தியர்களை மீட்பதற்காக தனி விமானம் அனுப்பப்பட்டது. முதற்கட்டமாக, 300 பேர் மீட்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் மதியம் மும்பை வந்து சேர்ந்தனர். பின், அங்கிருந்து வெவ்வேறு விமானங்கள் மூலம், நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மற்றும் ஒடிசாவை சேர்ந்த ஒருவர், நேற்று பகல், 12.30 மணிக்கு மும்பையில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை வந்தனர். இவர்களில், தினேஷ், கணேஷ், பூர்ணசந்திரன், பிரபு, சையது ஆகியோர், சென்னையில் உள்ள ஒரு தனியார் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணிபுரிபவர்கள். பிராஜக்ட்டிற்காக எகிப்து சென்றவர்கள், அங்கு சிக்கிக் கொண்டனர். மற்றொருவர், ராமராஜ். ஒடிசாவை சேர்ந்தவர்.
விமான நிலையத்தில் அவர்கள் அளித்த பேட்டி: எகிப்தில் கலவரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மக்கள் கைகளில் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நடமாடுகின்றனர். வெளியே சென்றால் உயிருக்கு ஆபத்து என்பதால் வீட்டிற்குள்ளேயே நான்கு நாட்களாக முடங்கிக் கிடந்தோம். கடைகள் எதுவும் திறக்கப்படாததால், சாப்பிட எதுவும் வாங்க முடியவில்லை. பட்டினியாகவே இருந்தோம். மத்திய அரசின் முயற்சியால், நாங்கள் அங்கிருந்து விமானம் மூலம் மீட்கப்பட்டு, மும்பை வந்து சேர்ந்தோம். அங்கு பல மணி நேரம், விமானத்திற்காக காத்திருந்தோம். இதையடுத்து, ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை வந்தோம். மேலும் ஏராளமான இந்தியர்கள் எகிப்தில் உள்ளனர். அவர்கள் பத்திரமாக இருப்பதாகவும், அடுத்த சில நாட்களில் அனைவரும் மீட்கப்படுவர் என்றும், தூதரக அதிகாரிகள் எங்களிடம் கூறினர். எங்களை காப்பாற்றி அழைத்து வந்த மத்திய அரசுக்கு நாங்கள் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Leave a Reply