மக்களை ஏமாற்றும் தந்திரச் செயலாக ராசா கைது தோன்றுகிறது-ஜெ

posted in: அரசியல் | 0

சென்னை: மிக மிக தாமதமாக ராசா கைது செய்யப்பட்டிருப்பது மேலும் பல கேள்விகளை எழுப்புகிறது. இது மக்களை ஏமாற்றும் ஒரு தந்திரச் செயல் என்றும் தோன்றுகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், 2ஜி அலைக்கற்றை ஊழலில் தொடர்புடைய முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ. ராசாவை சி.பி.ஐ. கைது செய்துள்ளது, மிகச் சிறிய நடவடிக்கை மட்டுமின்றி, மிகவும் தாமதமாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை ஆகும். இந்த கைது நடவடிக்கை பதில்களை தருவதற்குப் பதிலாக இன்னும் ஏராளமான சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்புகிறது.

இது, மக்களை ஏமாற்றும் தந்திரம் போல் தோன்றுகிறது. மேலும், அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சி.பி.ஐ. உச்ச நீதிமன்றத்தில் சொல்வதற்காகவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மத்திய அரசின் ஓர் அங்கமான மத்திய தலைமை கணக்கு தணிக்கைத் துறை, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக ஆ. ராசா மேற்கொண்ட நடவடிக்கைகளால் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று இப்போதைய தொலைதொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் கூறுகிறார்.

மத்திய அரசின் மற்றொரு அங்கமான சி.பி.ஐ., இப்போது ஆ. ராசாவை கைது செய்துள்ளது. அவர் தவறேதும் செய்யவில்லை என்றால், பின் எதற்காக அவரை சி.பி.ஐ. கைது செய்ய வேண்டும்? இப்போது கபில் சிபல் என்ன சொல்லப் போகிறார்?

சி.பி.ஐ. நடவடிக்கை உண்மையானதாக இருக்குமானால், மேலும் பலரும் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். நீரா ராடியா, இந்த ஊழலால் பலனடைந்த பல தொலைதொடர்பு நிறுவனங்களின் அதிகாரிகள், முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, துணைவி ராசாத்தி போன்றவர்கள், உலகின் மிகப் பெரிய ஊழலில் ஆ. ராசாவுக்கு துணையாக இருந்தவர்கள் என்று ஒலிநாடா பதிவுகள் காட்டுகின்றன. இவர்களையும் கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை.

இந்த விஷயத்தில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், சி.பி.ஐ.யும் முயற்சிப்பதாக நாம் நம்பும் சூழ்நிலை உள்ளது.

இந்த கைது நடவடிக்கை என்பது, தி.மு.க.வுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி, அதன் மூலம் திமுகவை பணிய வைத்து, வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் தங்கள் கட்சிக்கு அதிக தொகுதிகளை பெறுவதற்காக காங்கிரஸ் கட்சி மேற்கொள்ளும் தேர்தல் தந்திரமாக இருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

எனவே, அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பான உண்மைகளை நாட்டு மக்கள் அறிய வேண்டுமானால், அதற்கு நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைப்பது ஒன்று மட்டுமே தீர்வாக இருக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

தாமதமான நடவடிக்கை-எதிர்க்கட்சிகள்:

ராசா கைது குறித்து சிபிஎம் தலைவர் சீதாராம் எச்சூரி கூறுகையில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. இதன் பின்னணியில் மேலும் பலர் உள்ளனர். இப்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை மட்டும் போதாது, குற்றம்புரிந்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் மேலும் பல உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ரூ.1.76 லட்சம் கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளது என்றால் அரசின் செயல்பாடுகள் எந்த அளவுக்கு மோசமாக இருந்துள்ளது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைத்து முறைகேடுகள் தொடர்பாக முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி.ராஜா கூறுகையில், கைது நடவடிக்கை எதிர்பார்க்கப்பட்டதுதான். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இது தொடக்க நடவடிக்கையாக இருக்க வேண்டுமே தவிர, இத்துடன் அனைத்தையும் முடித்துவிடக்கூடாது. பிரதமர் அலுவலகத்துக்கும், மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகத்துக்கும் இந்த முறைகேட்டில் உள்ள தொடர்பு குறித்து பல சந்தேகங்களும், கேள்விகளும் எழுகின்றன என்றார்.

மேலும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடே நடக்கவில்லை என்று முன்பு கபில் சிபல் கூறினார். ஆனால் இப்போது ராசா உள்ளிட்ட மூவரைக் கைது செய்துள்ளது சிபிஐ. எனவே கபில் சிபல் இப்போது என்ன சொல்லப் போகிறார் என்று கேட்டுள்ளனர் ராஜாவும், எச்சூரியும்.

ஏ.ஐ.டி.யு.சி. பொதுச் செயலர் குருதாஸ் தாஸ்குப்தா கூறுகையில், ராசா மட்டுமல்ல; இந்த ஊழலில் தொடர்புடைய அனைவரையும் சி.பி.ஐ. கைது செய்யவேண்டும். ராசா கைதாவது முதல்வர் கருணாநிதிக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கும். அவருக்குத் தெரியாமல் ராசாவை கைது செய்திருக்க வாய்ப்பில்லை.

தமிழகத்தில் இடதுசாரி கட்சிகளும், ஆளும் கட்சிக்கு எதிராக உள்ளவர்களும் அ.தி.மு.க. தலைமையில் ஓரணியில் திரண்டு, வரும் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணியைத் தோல்வியுறச் செய்யவேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *