சிறிய ரக காரை அறிமுகப்படுத்த ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தீவிரம்

கொல்கத்தா: இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க, சிறிய ரக (ஹேட்ச்பேக்)காரை அறிமுகப்படுத்தும் பணிகளில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அம்பாசடர் காரை தயாரித்து புகழ்பெற்ற ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் இந்தியாவின் முன்னோடி கார் தயாரிப்பு நிறுவனமாகும். இந்திய கார் விற்பனை சந்தையில் பல ஆண்டு காலம் கோலோய்ச்சி வந்த ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், சி.கே.பிர்லா குழுமத்தின் துணை நிறுவனம்.

சந்தை நிலவரத்திற்கு தக்கவாறு புதிய மாடல்களை அறிமுகப்படுத்த தவறியது உள்ளி்ட்ட பல காரணங்களால் இந்நிறுவனம் கார் விற்பனையி்ல் பின்தங்கியது. இந்நிலையில், இழந்த சந்தையை மீண்டும் பிடிக்கும் விதமாக சிறிய ரக காரை அறிமுகப்படுத்த ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தீவிரமாக களமிறங்கியுள்ளது.

இதுகுறித்து நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

“சிறிய காரை வடிவமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.வரும் ஜூலை மாதம் சிறிய ரக காரின் மாதிரி வடிவமைப்பு டீலர்களிடம் அறிமுகப்படுத்தப்படும். இதுதவிர, செடான் ரக மாடலும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

இந்த இரண்டு மாடல்களும்,அம்பாசடர் கார் மாடலை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டு வருகிறது. வரிச்சலுகை பெறும் விதத்தில் இரண்டு கார்களின் நீளமும் குறைவாக இருக்கும். சந்தையில் ஒப்பிடும்போது இந்த கார்களின் விலையும் குறைவாக இருக்கும்.

மேற்குவங்கத்தில் உள்ள தொழிற்சாலையில் இந்த கார்கள் தயாரிக்கப்படும். தற்போது இந்த தொழிற்சாலையில் மாதத்திற்கு 700முதல் 800 அம்பாசடர் கார்கள் தயாரிக்கப்படுகிறது. மேலும் புதிய மாடல்களை தயாரிப்பதற்கு ஏற்ற உற்பத்தி திறனும் இந்த தொழி்ற்சாலை கொண்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் சந்தையில் முக்கிய இடத்தை பிடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது,”என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *