புதுடில்லி: நடப்பு 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பீ.பி.ஓ துறை 19 சதவீதம் வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பீ.பி.ஓ. என்று சுருக்கமாக அழைக்கப்படும், பணிகளை வெளியிலிருந்து நிறைவேற்றி தரும் சேவை துறையின் வருவாய், 7,600 கோடி டாலராக (3,49,600 கோடி ரூபாய்) அதிகரிக்கும் என, சாப்ட்வேர் துறைக்கான ‘நாஸ்காம்’ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ‘நாஸ்காம்’ அமைப்பின் தலைவர் சோம் மிட்டல் கூறியதாவது:
வெளிநாடுகள், உள்நாட்டிற்குள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பீ.பி.ஓ. சேவை துறை சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. சாப்ட்வேர் மற்றும் பி.பி.ஓ. சேவைகளை பெறுவதற்காக நிறுவனங்கள் அதிகளவில் செலவிட துவங்கியுள்ளன.
குறிப்பாக, உள்நாட்டிற்குள் தகவல் தொழில்நுட்பத்திற்காக மத்திய, மாநில அரசுகளும் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றன.
நிறுவனங்களும், சாப்ட்வேர் தொழில்நுட்பங்களுக்காக அதிகம் செலவிட துவங்கியுள்ளன. இதுபோன்ற காரணங்களால் நடப்பு நிதியாண்டில், மேற்கண்ட இரண்டு துறைகளின் வாயிலான ஒட்டுமொத்த வருவாய், சிறப்பான அளவில் அதிகரிக்கும்.நடப்பு 2010-11ம் நிதியாண்டில், தகவல் தொழில்நுட்ப துறையின் ஏற்றுமதி வளர்ச்சி 18.7 சதவீதம் என்ற அளவில் இருக்கும். ஏற்றுமதியின் வாயிலாக 5,900 கோடி டாலர் (2,71,400 கோடி ரூபாய்) வருவாய் ஈட்டப்படும் என்றும், இது, உள்நாட்டில் 16சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு, இதன் வாயிலான வருவாய் 78,200 கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கும் என, ‘நாஸ்காம்’ அமைப்பின் புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘நாஸ்காம்’ அமைப்பு 2010-11ம் ஆண்டில், இத்துறையின் ஏற்றுமதி வளர்ச்சி 13-15 சதவீதம் என்ற அளவிலும், உள்நாட்டில் இதன் வளர்ச்சி 15-17 சதவீதம் என்ற அளவிலும் இருக்கும் என, முன்பு மதிப்பீடு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி இன்னும் முழு அளவில் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.எனவே, தகவல் தொழில்நுட்பங்களுக்கான ஏற்றுமதி வளர்ச்சி, வரும் 2011-12ம் ஆண்டில் 16-18 சதவீத அளவிற்கு இருக்கும் என குறைத்து மதிப்பீடு செய்துள்ளது.இந்த மதிப்பீட்டின் அடிப்படையில், வரும் நிதியாண்டில் சாப்ட்வேர் மற்றும் சேவை துறையின் ஏற்றுமதி 6,800 – 7,000 கோடி டாலர் என்ற அளவில் இருக்கும். அதேசமயம், உள்நாட்டில் இப்பிரிவுகளின் வாயிலான வருவாய் வளர்ச்சி 15-17 சதவீதம் என்ற அளவில் இருக்கும்.இவ்வகையில், ரூபாய் மதிப்பின் அடிப்படையில், உள்நாட்டில் இத்துறையின் வருவாய் 90,000 – 92,000 கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கும்.நடப்பு நிதியாண்டில் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்பு பெற்றிருப்போர் எண்ணிக்கை 25.40 லட்சம் என்ற அளவில் உயர்ந்திருக்கும்.கூடுதலாக 2.40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2011-12ம் ஆண்டிலும், இதே அளவிற்கு வேலை வாய்ப்பு உருவாக கூடிய சூழ்நிலை உள்ளது என, சோம் மிட்டல் தெரிவித்தார்.நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில், தகவல் தொழில்நுட்ப துறையின் ஏற்றுமதி, 22.7 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப துறையின் வாயிலான வருவாய் 3,350 கோடி டாலராக உயரும்.பீ.பி.ஓ. துறையின் வளர்ச்சி, நடப்பாண்டில் 14 சதவீதம் வளர்ச்சி கண்டு, இதன் வாயிலான ஏற்றுமதி வருவாய் 1,410 கோடி டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில், பீ.பி.ஓ. துறையின் ஏற்றுமதி வளர்ச்சி, ஓரளவிற்கு மந்தமாக இருந்தது. ஆனால், இரண்டாவது அரையாண்டில் இத்துறையின் வளர்ச்சி மேம்பட்டுள்ளது.பொறியியல் வடிவமைப்பு, மேம்பாட்டு நடவடிக்கைகளின் வாயிலான வருவாய், நடப்பு நிதியாண்டில் 13.4 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,130 கோடி டாலராக (51,980 கோடி ரூபாய்) அதிகரிக்க வாய்ப்புள்ளது என ‘நாஸ்காம்’ அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது
Leave a Reply