புதுடில்லி : “”அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியே.
அது தொடரும். சீனா தன்னுடைய வரைபடத்தில், இந்த மாநிலத்தை இடம் பெறச் செய்வதன் மூலம் உண்மை நிலவரம் மாறி விடாது,” என, பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.
அருணாச்சல பிரதேச மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள், பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று சந்தித்தனர். அவர்களிடம் பிரதமர் பேசியதாவது: அருணாச்சல பிரதேச மாநிலம் இந்தியாவின் ஒரு பகுதி என்பதில், எந்த மாற்றமும் இல்லை. அந்த நிலை தொடரும். அருணாச்சல பிரதேச மாநிலத்தவர்களுக்கு பாஸ்போர்ட்டில் முத்திரையிடாமல், தனியாக பேப்பரில் முத்திரையிட்டு, அதை இணைத்து விசா தந்து கொண்டிருக்கிறது சீனா. இப்பிரச்னையை விரைவில் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அருணாச்சல பிரதேசம் ஒருபோதும் தனிமைப்படுத்தப்படாது. வளர்ச்சியின் பலன்கள், நாட்டின் மற்ற பகுதிகளை சென்றடைவதைப் போலவே, அங்கும் சென்றடையும். 2008ல், அருணாச்சல பிரதேசத்திற்கு நான் விஜயம் மேற்கொண்ட போது, உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகளுக்கு திட்டமிடப்பட்டது. அதை செயல்படுத்துவதில், தற்போது மத்திய, மாநில அரசுகள் முனைப்புடன் செயல்படுகின்றன. இவ்வாறு பிரதமர் கூறினார். இத்தகவலை, மாணவர் சங்கத் தலைவர் தகாம் தாதுங், நிருபர்களிடம் தெரிவித்தார்.
Leave a Reply