பிரிட்டனில் வேலையில்லா திண்டாட்டம் : இந்திய மாணவர் விசாவுக்கு தடை வரும்?

posted in: உலகம் | 0

லண்டன் : பிரிட்டனில் எம்.பி.ஏ., படித்து முடித்த இந்திய மாணவர்கள் வேலை தேடுவற்காக இரண்டாண்டு காலம் அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது, பிரிட்டனில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதையடுத்து, இதற்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இதன் காரணமாக எம்.பி.ஏ., படிக்க வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவை போன்று பிரிட்டனிலும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், ஐரோப்பிய நாடுகளைச் சாராத பிற சர்வதேச மாணவர்கள் பிரிட்டனில் தங்கி வேலை தேடுவதைத் தடுக்க விசா வழங்கும் நடைமுறையில் படு கெடுபிடிகளை கொண்டுவர அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

பிரிட்டினில் எம்.பி.ஏ., படிப்பு படிப்பதற்காக இந்தியா உட்பட சர்வதேச நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் வருவர். இரண்டாண்டு காலம் படிப்பை முடித்ததும், பல மாணவர்கள், பிரிட்டனில் வேலை தேடுவர். குறிப்பாக இந்தியா, சீனா, நாடுகளிலிருந்து தான் அதிகளவில் மாணவர்கள் வருவர். இவர்களின் வருகையால், கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரிட்டனை சேர்ந்த மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதில் சிக்கல் நிலவியது.

சமீபத்தில், விழா ஒன்றில் பேசிய பிரிட்டன் குடியேற்றத்துறை அமைச்சர் டாமின் கிரீன் பேசுகையில்,” ஐரோப்பிய நாடுகள் அல்லாத சர்வதேச நாடுகளிலிருந்து வந்துள்ள மாணவர்கள் எண்ணிக்கையால், பிரிட்டனை சேர்ந்த மக்கள் வேலைவாய்ப்பு பெறுவதில் சிக்கல் நிலவுகிறது. இதைத் தடுக்க, பிரிட்டனில் படிக்க வரும் மாணவர்கள் தங்கள் படிப்புக் காலம் முடிந்ததும், இரண்டாண்டுகள் வேலை பார்க்க அனுமதிக்கப்பட்டனர். தற்போது, இதற்கான விசாவை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

பிரிட்டனின் இந்த முடிவால், இந்திய மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்படும் சூழ்நிலை எழுந்துள்ளது. லண்டனில் செயல்படும் எம்.பி.ஏ., மாணவர்களுக்கான அமைப்பு இது குறித்து கூறியதாவது: எம்.பி.ஏ., படிப்பு பிரிட்டன் உட்பட 70 நாடுகளில் உள்ளது. படித்து முடித்ததும், வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை காரணமாக இந்தியா மற்றும் சீனாவில் இருந்து பெருமளவில் மாணவர்கள் வருகின்றனர். ஆனால், படிப்பு முடித்த பிறகு, இரண்டாண்டு காலத்திற்கு வழங்கப்பட்ட விசாவை தடை செய்யும் முடிவால், பலரும் பாதிக்கப்படுவர். மேலும், எம்.பி.ஏ., படிக்க வரும் மாணவர்கள் எண்ணிக்கை குறையும். படிப்பை முடித்ததும் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாவதால் பலரும் வருவதற்கு தயங்குவர். இதனால் கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா பக்கம் மாணவர்கள் திரும்புவர். இது பிரிட்டன் கல்லூரிகளுக்கு பாதிப்பாக அமையும். இவ்வாறு அந்த அமைப்பு கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *